வங்கதேசத்தினர் ஊடுருவல்; அரசு மீது அசோக் குற்றச்சாட்டு
பெங்களூரு : ''போலி ஆவணங்களை தயாரித்து, வங்கதேசத்தில் இருந்து பலரும் பெங்களூருக்கு வருகின்றனர்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தெரிவித்தார்.பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை தகர்க்க சதித் திட்டம் தீட்டியது, என்.ஐ.ஏ., விசாரணையில் கண்டறியப்பட்டது.இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மல்லேஸ்வரம் அலுவலகத்தில் நேற்று கூறியதாவது:ஐ.டி., -- பி.டி., தலைநகரான பெங்களூரில் பயப்படும் சூழ்நிலை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை நாசப்படுத்த, பயங்கரவாதிகள் சதித் திட்டம் வகுத்தனர். இதற்கு முன்னோடியாக தான், காங்கிரசின் ஒரு எம்.எல்.சி., வங்கதேச பிரதமருக்கு ஏற்பட்ட நிலை போன்று, கவர்னருக்கு ஏற்படும் என்று மிரட்டல் விடுத்தார்.வங்கதேசத்தில் இருந்து, போலி ஆவணங்களை தயாரித்து, பலரும் பெங்களூருக்கு வருகின்றனர். இதனால், பயங்கரவாத செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இவர்கள் மீது உள்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, பெங்களூரில் பயங்கரவாத தடுப்பு சிறப்புப் படை அமைக்கப்பட வேண்டும்.மாநிலத்துக்குள் நுழையும் வங்கதேசத்தினரை, உடனே கண்டுபிடித்து, நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால், மேற்கு வங்கம், அசாம் போன்ற நிலைமை, கர்நாடகாவுக்கு ஏற்படும். நம் மாநிலத்தை, பயங்கரவாதிகள் கட்டுப்படுத்தும் நிலைக்கு செல்லக் கூடாது.'ஸ்லீப்பர் செல்களை' கண்டுபிடிக்கும் பணியில், மாநில அரசு ஈடுபட வேண்டும். விதான் சவுதாவில், பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியதையும், காங்கிரஸ் அமைச்சர் மறுத்து விட்டார். அடிக்கடி பயங்கரவாத ஆதரவு கோஷம் எழுப்பி துாண்டும் பணிகள் நடக்கின்றன.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், பயங்கரவாதிகளுக்கு பயமே இல்லை. ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு போன்று, ஹிந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.