புறநகர் ரயில் பாதை பணிகள் தீவிரம் 2026 டிசம்பரில் பயணம் துவக்கம்
பெங்களூரு: ''புறநகர் ரயில் பாதை 2 மற்றும் 4ம் கட்ட பணிகள், 2026 டிசம்பரில் முடிவடைந்து பயணியர் பயணிக்கலாம்,'' என ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று கே - ஆர்.ஐ.டி.இ., எனும் கர்நாடகா - ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில் நடந்தது. அப்போது நடந்த உரையாடல்:மத்திய அமைச்சர் சோமண்ணா: சிக்கபானவாரா முதல் பையப்பனஹள்ளி வரையிலான 25 கி.மீ., துாரம் 2ம் கட்டம்; ஹீலலிகே - ராஜனகுன்டே வரையிலான 41 கி.மீ., துாரம் 4ம் கட்டம் புறநகர் ரயில் பாதை பணிகள் முடிந்து, 2026 டிசம்பரில் பொது மக்கள் பயணிக்கலாம்.நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க, அதிகாரிகள் மூன்று மாதம் அவகாசம் கேட்டு உள்ளனர். அதற்கு மேல் தாமதிக்க கூடாது.பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த இவ்விரு திட்டப் பணிகளும், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்.மீதமுள்ள இரு வழித்தடங்கள் தொடர்பான பணிகள் குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். நம்ம மெட்ரோ, கே-ஆர்.ஐ.டி.இ., நிறுவனம், ரயில்வே துறை அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.மாநில அமைச்சர் எம்.பி.பாட்டீல்: ரயில்வே பெட்டிகள் தயாரிக்க அழைக்கப்பட்ட டெண்டருக்கு ஏலதாரர்கள் வரவில்லை.சோமண்ணா: புதுடில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும். குறிப்பிட்ட தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, ரயில் பெட்டிகள் கொள்முதல் முடிக்கப்பட வேண்டும்.எம்.பி.பாட்டீல்: புறநகர் ரயில் திட்டத்தை, அண்டை நகரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.சோமண்ணா: சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறேன். புறநகரங்களை இணைக்கும் வகையில், 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 281 கி.மீ., புறநகர் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, நம்ம மெட்ரோ நிர்வாக அதிகாரி மகேஸ்வர ராவ், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், கே-ஆர்.ஐ.டி.இ., நிர்வாக அதிகாரி மஞ்சுளா பங்கேற்றனர்.கே-ஆர்.ஐ.டி.இ.,யின் புறநகர் ரயில் திட்டம் தொடர்பாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.