ராஜஸ்தானில் மாணவனுக்கு கத்தி குத்து கலவரத்தால் இணைய சேவை ரத்து
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் 10ம் வகுப்பு மாணவரை மற்றொரு மாணவர் கத்தியால் குத்தியதை அடுத்து, நகரில் மத கலவரம் ஏற்பட்டது. இதனால் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உதய்பூரின் பட்டியானி சோஹட்டா பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் பள்ளியின் வெளியில், 10ம் வகுப்பு மாணவரை, அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். பதற்றம்
அப்பகுதி மக்கள் குத்துப்பட்ட மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். அப்போது சிலர் அங்கு உள்ள கடைகள் மீது கற்களை வீசி தாக்கினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ வைத்தனர். இதில் மூன்று கார்கள் எரிந்து சேதமாயின. இதனால் உதய்பூரில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதய்பூரில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையரையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் பரவாமல் இருக்க மொபைல் இணைய சேவைகள் 24 மணி நேரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளன. வீடு இடிப்பு
மாணவரை குத்திய மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவரின் வீடு வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பது தெரியவந்தது. அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஜே.சி.பி., வாயிலாக வீடு இடித்து தள்ளப்பட்டது.