எங்களின் உணர்வுகளுக்கு கைமாறு இதுதானா? தமிழ்ச்சங்கத்துக்கு வாழ்நாள் உறுப்பினர் கேள்வி
பெங்களூரு தமிழ் சங்க வாழ்நாள் உறுப்பினர் எஸ்.எம்.பழனி அறிக்கை:அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி, குறுகத்தறித்த குறள்களை தந்த திருவள்ளுவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு, கர்நாடக மாநில தமிழ் நெஞ்சங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது எதார்த்தமாக நடந்ததல்ல. இதன் பின்னணியில் சிலரின் உள்ளடி அரசியல் இருக்கிறது. திட்டமிட்டே இந்த சதி நடத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளன. இதுகுறித்து தமிழ்ச் சங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? காரணம் என்ன?
இதை அழுத்தம் திருத்தமாக சங்க நிர்வாகிகள், அரசிடம் சுட்டிக்காண்பித்து, தகுந்த பாதுகாப்பு போட்டிருந்தால், இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.எப்போது தமிழ்ச் சங்கம் என்பதை மாற்றி, ஒரு சில சுயநலவாதிகள், ஒரு கட்சிக்கு ஆதரவு தருகிறது தமிழ்ச் சங்கம் என, கூறுபோட்டனரோ, அப்போதே இதுபோல சம்பவம் நடக்க வாய்ப்புகள் அதிகம்.இதற்கு தமிழ்ச்சங்கம் தற்போதைய நிர்வாகிகளே முழு பொறுப்பு. இதை தடுக்கத் தவறிய, தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக திறமையின்மை எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நியாயமான மக்கள் குரல்
நகரில் எத்தனையே சிலைகள் பாதுகாப்பாக இருக்க, திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று கேட்கும் மக்களின் குரலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.தவறிழைத்தோர் மீது பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சிலைக்கு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் உணர்வுகளுக்கு செய்த 'கைமாறு இதுதானா' என தோன்றுகிறது.குறைந்தபட்சம் சம்பவம் நடந்துள்ள இடத்தை கூட நேரில் சென்று பார்வையிட மனமில்லாத இந்த நிர்வாகிகளால், இனி எந்த பயனும் இல்லை.இதற்கு பொறுப்பு ஏற்று, தாங்களாகவே தங்களின் பதவிகளை துறக்க வேண்டும்.தமிழ்ச் சங்க நிர்வாகிகளே, நல்லது செய்ய தவறினாலும், உங்களுக்கு நல்லதல்ல. குறைந்த காலம் தான் உங்களுக்கு. ஊர்பழிக்கு ஆளாகாதீர்கள். இது உணர்ந்தவரின் கணக்கு.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.