கோலார் : ''மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்பது, எனக்கும் தெரியும்,'' என கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்கவுள்ள நிலையில் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது வெளியான அனைத்து கருத்து கணிப்புகளும், பா.ஜ.,வுக்கு தேனாகவும், காங்கிரசுக்கு வேப்பங்காயாகவும் உள்ளது. இம்முறையும் மத்தியில் பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார் என, கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. இது காங்கிரசாருக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அதை வெளியே காண்பிக்கவில்லை. 'கருத்து கணிப்புகள் தலைகீழாகும். இண்டியா கூட்டணி 295 தொகுதிகளை கைப்பற்றி, மத்தியில் அரசு அமைக்கும்' என, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட மற்ற தலைவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் நேற்று கூறியதாவது:மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்பது, எனக்கு தெரியும். நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், உண்மையை கூற வேண்டும். பொய் சொல்லக்கூடாது. மத்தியில் பா.ஜ., அரசு அமையும் என்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.இம்முறை பா.ஜ., ஆட்சியில் அமரட்டும். அடுத்த முறை ஆட்சியை கைப்பற்றுவது எங்களின் குறிக்கோளாகும். கோலார் தொகுதியில் 29,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.ரமேஷ்குமாருக்கு மேலவை சீட் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. ரமேஷ்குமார் சீட் கேட்கவில்லை. அவருக்காக நாங்களே கேட்டோம். அவருக்கு வாய்ப்பு கை நழுவியுள்ளது. வரும் நாட்களில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டால், கோலார் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும். தேர்தல் விதிகள் வாபஸ் ஆனதும், தொகுதியில் வளர்ச்சி பணிகள் துவங்கும். வெளிவட்ட சாலைக்கு, திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. மூன்று மாதங்களில் டெண்டர் முடிவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.