உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்கில் போரில் பாக்., ராணுவம் 25 ஆண்டுகளுக்கு பின் ஒப்புதல்

கார்கில் போரில் பாக்., ராணுவம் 25 ஆண்டுகளுக்கு பின் ஒப்புதல்

புதுடில்லி, இந்தியா - பாக்., இடையே, கார்கில் போர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதன்முறையாக, போரில் பங்கேற்றதை அந்நாட்டின் ராணுவ தளபதி ஒப்புக் கொண்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவம், 1999ல், ஜம்மு - காஷ்மீரின் கார்கில் அருகே உள்ள பகுதியை ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து, நம் ராணுவம் போரிட்டது.அந்தாண்டு மே மாதம் துவங்கிய போர் ஜூலை வரை நடந்தது. இந்த போரில், ஜூலை 26ல் நம் ராணுவம் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆண்டுதோறும் ஜூலை 26-ல் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.'கார்கில் போரில் பாக்., ராணுவத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை. காஷ்மீர் சுதந்திரத்துக்காக போராடிய குழுக்கள் தான் இந்திய ராணுவத்துடன் போரிட்டன' என, பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்நிலையில், பாக்., ராணுவ தினத்தையொட்டி, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் பேசியதாவது:இந்தியாவுடன், 1948, 1965, 1971ல் நடந்த போர்களில் நம் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் செய்தனர். இதே போல், கார்கில் போரிலும் நம் ராணுவத்தினர் பலர் உயிரிழந்தனர்.இவ்வாறு அவர் பேசினார்.'கார்கில் போரில் பாக்., ராணுவத்துக்கு எந்த தொடர்பும் இல்லை' என, அந்நாட்டின் ராணுவமும், அந்த நாட்டு அரசும் தெரிவித்து வந்த நிலையில், தற்போது 25 ஆண்டுகளுக்கு பின், அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், போரில் பாக்., ராணுவம் பங்கேற்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை