உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 28 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் கர்நாடக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை

28 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் கர்நாடக பா.ஜ., தலைவர்கள் நம்பிக்கை

மல்லேஸ்வரம்: 'கர்நாடக லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்' என, பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பா.ஜ., - 25, ம.ஜ.த., - 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். காங்கிரஸ், 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.தேர்தல் முடிந்த நிலையில், கட்சியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இரண்டரை மணி நேரம்

கூட்டத்தில், முன்னாள் முதல்வர்கள் பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, முன்னாள் அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், சி.டி.ரவி உட்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். சில வேட்பாளர்கள், மாநிலத்தின், 28 தொகுதிகளின் மாவட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர்.இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு தொகுதியில் நடத்திய மாநாடுகள், பிரசார யுக்தி குறித்து கலந்துரையாடினர். வெற்றி வாய்ப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.பின், மாநில பொதுச் செயலர் சுனில் குமார் கூறியதாவது:பெரிய மாநாடுகள், 'ரோடு ஷோ', வீடுதோறும் பிரசாரம் என, லோக்சபா தேர்தலுக்காக நடத்திய, மூன்று விதமான மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றன.

14 தேசிய தலைவர்கள்

பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட 14 தேசிய தலைவர்கள், 79 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றனர். 39 இடங்களில் 'ரோடு ஷோ' நடந்தன.முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட 30 பேர் கொண்ட மாநில தலைவர்கள், 139 இடங்களில் ரோடு ஷோ, 557 பொதுக்கூட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.இப்படி மொத்தம், 650க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 180க்கும் மேற்பட்ட ரோடு ஷோக்கள் மூலம், வாக்காளர்களை தொடர்பு கொண்டோம். காங்கிரஸ் அரசின் தோல்விகள் குறித்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய, சிறிய கூட்டங்கள் நடத்தப்பட்டன.

152 புகார்கள்

ம.ஜ.த.,வுடன் நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. அக்கட்சி போட்டியிட்ட மூன்று தொகுதிகளில், பா.ஜ.,வினரும்; பா.ஜ., போட்டியிட்ட 25 தொகுதிகளில், ம.ஜ.த.,வினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். எனவே 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் உற்சாகத்தில் உள்ளோம்.லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின், காங்கிரஸ் அரசு, உட்கட்சி பூசலால் கவிழ்ந்து விழும். தேர்தல் முறைகேடு குறித்து, 152 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை