மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. டில்லியில், 2021 - 2022ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை திருத்தப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, அந்த கொள்கை கைவிடப்பட்டது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.நிபந்தனைஆனால், 'முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ அவர் செல்லக் கூடாது. துணை நிலை கவர்னர் ஒப்புதல் தேவைப்படாத ஆவணங்களில் கையெழுத்திடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த 2014ல் லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற முடியாததால், 49 நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து விலகினேன். என் கொள்கைகளுக்காக பதவியில் இருந்து விலகினேன். அதிகார பதவிக்காக துடிப்பவன் அல்ல நான்.டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோதும், முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம்.கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என, பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்களுக்கு இது போன்ற நெருக்கடியை, மத்தியில் ஆளும் பா.ஜ., அளித்து வருகிறது.மத்திய பா.ஜ., அரசு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை விட சர்வாதிகாரமாக செயல்படுகிறது. அதற்கு அடிபணிந்து விடக்கூடாது. என்ன ஆனாலும், பதவியை ராஜினாமா செய்யாதீர்கள் என, பா.ஜ., ஆளாத மாநில முதல்வர்களை கேட்டுக் கொள்கிறேன்.டில்லி முதல்வர் பதவி நாற்காலி எனக்கு தேவையில்லை. தற்போது நீதித்துறையில் எனக்கு ஜாமின் கிடைத்துள்ளது. நான் குற்றம் செய்துள்ளேனா என்பதை மக்கள் மன்றத்தில் வாதிட உள்ளேன். அவர்களின் தீர்ப்புக்காக காத்திருப்போம்.அக்னி பரீட்சைஇதற்காக அக்னி பரீட்சையில் இறங்க உள்ளேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்தி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்.சட்டசபைக்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்க வேண்டும். மஹாராஷ்டிராவுடன் இணைந்து, இந்தாண்டு நவம்பரில் டில்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தும்படி தேர்தல் கமிஷனை கேட்க உள்ளோம். நான் நேர்மையானவன் என்பதற்கு மக்கள் ஒப்புதல் அளித்தால் தான், தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவியில் நானும், துணை முதல்வர் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமர்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.
அரசியல் நாடகம்: பா.ஜ., கிண்டல்!
கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என, பா.ஜ., விமர்சித்துள்ளது. இது குறித்து, அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா கூறியதாவது:ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போதே, தன் மனைவி சுனிதாவை முதல்வர் பதவியில் அமர்த்த கெஜ்ரிவால் திட்டமிட்டார். தற்போது அதற்காக ஒரு அரசியல் நாடகத்தை நடத்தியுள்ளார். சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில், கெஜ்ரிவால் பிஎச்.டி., செய்துள்ளார்.டில்லி மதுபான ஊழல் வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் தான் வழங்கியுள்ளது; வழக்கில் இருந்து விடுவிக்கவில்லை. மேலும், கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதனால், பெயரளவுக்கு தான் அவர் முதல்வராக இருக்க முடியும். இதையடுத்தே, இந்த அரசியல் நாடகத்தை அவர் அரங்கேற்றியுள்ளார். இது அவருடைய விளம்பர உத்தி.இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியுள்ளதாவது:இந்த அறிவிப்பின் வாயிலாக, தான் குற்றம் செய்துள்ளதை கெஜ்ரிவால் ஒப்புக் கொண்டுள்ளார். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களாலேயே அவர் பதவி விலகியுள்ளார். மக்களிடம் அனுதாபத்தை தேட முயற்சிக்கிறார். தன்னை நேர்மையானவர் என்று கூறிக் கொள்ளும் அவர், குற்றஞ்சாட்டப்பட்டபோதே அல்லது கைது செய்யப்பட்டபோதே பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்கு வாய்ப்பு?
அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்து யார் முதல்வராவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. பல முக்கிய துறைகளை கவனித்து வரும் ஆதிஷிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தவிர, அமைச்சர்களாக உள்ள கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், கோபால் ராய், இம்ரான் ஹூசைன் உட்பட பலரின் பெயர்களும் உலா வருகின்றன. - நமது சிறப்பு நிருபர் -