புதுடில்லி, :சிறையிலிருந்து வெளியில் வந்த பின்னும் உடல் எடை கூடாததாலும், பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும், ஜாமினை ஏழு நாட்களுக்கு நீட்டிக்கும்படி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார். டில்லி திஹார் சிறையில் 50 நாட்கள் இருந்த அவருக்கு, மே 10ல் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் அளித்தது. லோக்சபா தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் ஜூன் 1ல் முடிவடைவதை அடுத்து, ஜூன் 2ல் அவரை மீண்டும் சரணடையும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி திஹார் சிறையில் மார்ச் 21 முதல் மே 10 வரை இருந்த காலகட்டத்தில், சிறை நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளானார். அவரது உடல் எடை, 7 கிலோ குறைந்தது. அவர் ஜாமினில் வெளிவந்த பிறகும் உடல் எடை கூடவில்லை. கடந்த 25ம் தேதி அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், அவரது ரத்த சர்க்கரை அளவு அசாதாரணமாக அதிகரித்துள்ளது. சிறுநீரக கீட்டோன் அளவும் கூடியுள்ளது. அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.மேலும், காரணமின்றி திடீரென எடை குறைவதும், அது மீண்டும் அதிகரிக்காமல் இருப்பது மருத்துவ ரீதியிலான கவலைகளை ஏற்படுத்தி உள்ளன. சிறுநீரக மற்றும் இதய கோளாறு அல்லது புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இருந்தால் மட்டுமே, உடல் எடை திடீரென குறையும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கெஜ்ரிவாலுக்கு, 'பெட்சிடி' உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு, ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும். இதை கருத்தில் வைத்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமினை, ஏழு நாட்கள் நீட்டிக்கும்படி கோருகிறோம்.ஜூன் 2க்கு பதிலாக, ஜூன் 9ம் தேதி அவர் சரண் அடைவார்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.இப்போதே செய்யட்டுமே?பிரசாரம் செய்வதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் அளித்தது. அதை எந்த பிரச்னையும் இன்றி அவர் செய்து வருகிறார். இப்போது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். அது உண்மையானால், பஞ்சாபில் பிரசாரம் செய்வதற்கு பதில், மருத்துவ பரிசோதனைகளை அவர் ஏன் இப்போதே செய்து கொள்ளக் கூடாது?வீரேந்திர சச்தேவாடில்லி பா.ஜ., தலைவர்
வக்கீலுக்கு விதித்த அபராதம் தள்ளுபடி
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி முதல்வர் பணியை கவனிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து தர உத்தரவிடக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், தவறுக்கு மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் அவர் கடிதம் அளித்ததை அடுத்து, அந்த அபராதத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டில்லி சட்ட சேவை ஆணையத்துடன் இணைந்து நீதித்துறையில் சேவையாற்றும்படி அவருக்கு உத்தரவிட்டது.