ஷிவமொகா: ''தந்தை பங்காரப்பாவுக்கு அடைக்கலம் கொடுக்காத மகன் குமார் பங்காரப்பாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,'' என சாகரா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேளூர் கோபால கிருஷ்ணா தெரிவித்தார்.ஷிவமொகாவில் பா.ஜ., சார்பில், நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய குமார் பங்காரப்பா, 'பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாவை, மீண்டும் தொடக்க பள்ளிக்கு அனுப்ப வேண்டும். தற்போது காங்கிரஸ் தேசிய கட்சியாக இல்லை; மாநில கட்சியாக மாறியுள்ளது. காங்., வேட்பாளர் கீதா சிவராஜ்குமார், கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற மாட்டார்' என குற்றம் சாட்டினார்.இவருக்கு பதிலடி கொடுத்து, சாகராவில் நேற்று பேளூர் கோபால கிருஷ்ணா கூறியதாவது:முன்னாள் முதல்வர் பங்காரப்பாவுக்கு, அடைக்கலம் கொடுக்க முடியாத குமார் பங்காரப்பா, சொந்த தந்தையை வீட்டை விட்டு வெளியே தள்ளினார். இப்படிப்பட்டவரிடம் நீதி போதனை கேட்க வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை.பங்காரப்பாவை போன்று, கண்ணாடி அணிந்தால், பங்காரப்பா ஆகிவிட முடியாது. ஆனால், நான் அவரது சீடன். இந்த பதவியை பறிக்க குமார் பங்காரப்பாவால் முடியுமா.குமார் பங்காரப்பா பெயரில் உள்ள, 'பங்காரப்பா' என்ற வார்த்தையை நீக்கிவிட்டால், அவரது பாடு, நாய் பாடாக இருக்கும். பங்காரப்பா காலமான போது, அவரது உடலை சுமக்க தோள் கொடுக்கும் அதிர்ஷ்டம் கூட, குமார் பங்காரப்பாவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது.இதற்கு முன், முன்னாள் எம்.எல்.ஏ., ஹாலப்பாவும் கூட, இதுபோன்று நாக்கை கட்டுப்படுத்தாமல் பேசினார். தொகுதி மக்கள் அவரது வாலை நறுக்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.குமார் பங்காரப்பா, அமைச்சர் மது பங்காரப்பாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.