பா.ஜ., அரசின் வழிகாட்டு ஆவணம் உரையில் துணைநிலை கவர்னர் விளக்கம்
விக்ரம் நகர்:'பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியை அரசின் வழிகாட்டும் ஆவணமாக அரசு ஏற்றுக் கொள்ளும்' என, துணைநிலை கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எட்டாவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. முதல்நாளன்று எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.இரண்டாம் நாளான நேற்று துணைநிலை கவர்னர் உரையுடன், சபை நிகழ்ச்சிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சட்டசபைக்கு வந்த துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை பூங்கொத்து கொடுத்து முதல்வர் ரேகா குப்தா, சபாநாயகர் வீரேந்தர் குப்தா ஆகியோர் வரவேற்றனர்.கவர்னரை இருவரும் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். புதிய அரசின் உரையை கவர்னர் வாசித்தார். அவர் உரை:புதிய அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டும் ஆவணமாக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும்.கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியான அரசியல் மோதல்கள் மற்றும் பழி சுமத்தும் விளையாட்டுகள், டில்லியின் முன்னேற்றத்தைத் தடுத்துள்ளன. டில்லியில் பதவியேற்றுள்ள புதிய அரசு, மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும். பயனுள்ள நிர்வாகத்தை புதிய அரசு உறுதி செய்யும்.ஊழல் இல்லாத நிர்வாகம், மேம்பட்ட கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஏழைகளின் நலன், உலகத்தரம் வாய்ந்த சாலைகள், மாசு இல்லாத டில்லி, சுத்தமான குடிநீர், அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துதல், யமுனை நதியை புத்துயிர் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் புதிய அரசு கவனம் செலுத்தும்இந்த முன்னுரிமைகளை செயல்படுத்த 100 நாள் செயல் திட்டங்களைத் தயாரிக்க அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.முந்தைய அரசாங்கத்தின் குறைபாடுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் முன்னேற்றத்திற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கைகளை சபையில் சமர்ப்பிக்கப்படும்.விரிவான விளம்பரங்களால் மறைக்கப்பட்ட கீழ்நிலை அமைப்பை அகற்றி, நிர்வாகத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வருவதே என் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும்.இவ்வாறு அவர் உரையாற்றினார்.