உத்தர கன்னடா : பெண் பூனை பின்னால் சுற்றிய ஆண் பூனையால், அண்டை வீட்டினர் இடையே ஏற்பட்ட தகராறு, வெட்டு குத்தில் முடிந்தது. படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். அடிக்கடி தகராறு
நடிகர் வடிவேலுவின், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில், 'புறாவுக்காக போரா; பெரிய அக்கப்போராக இருக்கிறதே' என்ற வசனம் வரும். அப்படி ஒரு சம்பவம், கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் நடந்துள்ளது.இம்மாவட்டத்தின் தண்டேலி, தேஷ்பாண்டே நகர் பஸ் டிப்போ அருகில் வசித்து வருபவர் இப்சான். தன் வீட்டில் பெண் பூனை வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அதனன், ஆண் பூனை வளர்த்து வருகிறார்.வழக்கம் போல் பெண் பூனை பின்னால், ஆண் பூனை சுற்றி திரிந்தது. இது குறித்து, இப்சான் பலமுறை எச்சரித்தும், அதனன் கேட்கவில்லை. இதனால், இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் பெண் பூனை பின்னால், ஆண் பூனை சுற்றியது. இதை பார்த்த இப்சான் கோபம் அடைந்தார். பக்கத்து வீட்டின் அதனனை அழைத்து திட்டி உள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணை
அப்பகுதியினர் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இப்சான், தன் வீட்டில் இருந்த வாளை எடுத்து வந்து, அதனனின் தலையில் வெட்டினார். இதை தடுக்க வந்த அதனனின் சகோதரர் அர்சானின் மூக்கிலும் வெட்டினார்.படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்களை தாக்கிய இப்சானை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.