போதை பொருள் விற்க மகனை பயன்படுத்தியவர் கைது
திருவனந்தபுரம்,: போதை பொருட்கள் விற்பனைக்கு மகனை பயன்படுத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பத்தனந்திட்டா மாவட்டம், திருவல்லாவில் ஒருவர் போதை பொருட்களை விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரை ஆறு மாதங்களாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை திருவல்லாவில் பைக்கில் சென்ற அவரை போலீசார் பிடித்து பரிசோதனை செய்தபோது, அவரிடம் 4 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.விசாரணையில், அவர் திருவல்லாவைச் சேர்ந்த முகம்மது ஷெமீர், 39, என்பது தெரிந்தது. கர்நாடக மாநிலத்திலிருந்து மொத்தமாக போதைப்பொருட்களை வாங்கி வந்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.போலீசாரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக தன், 10 வயது மகனையும் இதில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மகனின் ஆடைக்குள் ஒட்டி, யாரும் சந்தேகப்படாத வகையில் பைக்கில் அழைத்துச் சென்று, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். முகமது ஷெமீர், திருவல்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.