போலீசுக்கு பயந்து போதை பொருளை விழுங்கிய நபர் பலி
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மைக்காவு என்ற பகுதியைச் சேர்ந்தவர், ஷானித், 28. இதே மாவட்டத்தின் தாமரச்சேரி என்ற பகுதியில், 'மெத்திலீன் டையாக்ஸி மெத்ஆம்பெட்டமைன்' என்ற போதைப்பொருள் பாக்கெட்டுகளுடன், நேற்று முன்தினம் அவர் சுற்றித்திரிந்தார். போலீசார் வருவதை பார்த்த ஷானித், போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கி தப்பிச் செல்ல முயன்றார். அவரை மடக்கி பிடித்து, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். பரிசோதனையில், அவரது வயிற்றில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி ஷானித் உயிரிழந்தார்.