| ADDED : செப் 09, 2024 01:10 PM
மங்களூரு; மங்களூரு அருகே தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை தனி ஒருத்தியாக 14 வயது சிறுமி ஒருவர் தூக்கி காப்பாற்றிய வீடியோ வைரலாகி இருக்கிறது.இது பற்றிய விவரம் வருமாறு; ராஜரத்னபுரா பகுதியைச் சேர்ந்தவர் சேத்னா (35). வழக்கமான தமது பணியை முடித்துக் கொண்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மகளை அவர் அழைத்துச் செல்வார். சம்பவத்தன்று கின்னிகோலி பகுதியில் டியூசன் படிக்கச் சென்ற தமது மகளை அழைத்து வரச் சென்றார்.சாலையில் ஒருபுறம் நின்று கொண்டு இருந்த சேத்னா,மறுபுறம் மகள் வைபவி (14) காத்திருப்பதைக் கண்டார். சற்றும் தாமதமின்றி சாலையை கடந்தார். அப்போது இடதுபுறம் அசுர வேகத்தில் ஆட்களுடன் ஆட்டோ ஒன்று திடீரென வந்தது. சாலையின் குறுக்கே சேத்னா வருவதை அறிந்த ஆட்டோ டிரைவர், அவர் மீது மோதாமல் இருக்க வண்டியை நிறுத்தினார்.வேகம் அதிகம் என்பதால் ஆட்டோ அப்படியே சேத்னா மீது கவிழ்ந்து பல அடி தூரம் இழுத்துக் கொண்டு சென்றது. விபத்தைக் கண்ட மகள் வைபவி பதறியபடி ஓடி வந்தாள். தனது தாய் மீது ஆட்டோ சாய்ந்து கிடப்பதைக் கண்டு கொஞ்சமும் பதறாமல் தீரத்துடன் தனியாளாக அந்த ஆட்டோவை அப்படியே தூக்கி நிறுத்தி தாயை காப்பாற்றினார்.ஆட்டோவை தூக்கிய போது அதனுள் இருந்த சிலர், காயங்களுடன் பீதியில் உள்ளே இருந்து எழுந்து தப்பித்துச் சென்றனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கீழே விழுந்த சேத்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.14 வயது மாணவியின் வீரதீர செயல் அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பலரும் பார்த்து தைரியமாக சமயோசித புத்தியுடன் செயல்பட்டு தாயையும், ஆட்டோவில் வந்த மற்றவர்களையும் காப்பாற்றிய சிறுமிக்கு வீரதீர செயல்களுக்கான விருது அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும், சிறுமியின் தைரியத்தையும் பாராட்டி வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.