மேலும் செய்திகள்
வாழ தகுதியான நகரங்கள் சென்னைக்கு ஐந்தாம் இடம்
24-Feb-2025
புதுடில்லி: உலக அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் உலகின் அதிக மாசுள்ள 20 நகரங்களில், 13 இந்தியாவில் உள்ளவை. மேகாலயாவின் பிரினிஹாட் முதலிடத்தில் உள்ளது.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, 'ஐக்யூஏர்' என்ற காற்று தர தொழில்நுட்ப நிறுவனம், 2024ம் ஆண்டுக்காக உலக காற்று தரவரிசை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், அதிக மாசுள்ள நாடுகள், அதிக மாசுள்ள தலைநகரங்கள், அதிக மாசுள்ள நகரங்கள் என, பல வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நாடுகள் பட்டியலில், மத்திய ஆப்ரிக்க நாடான சாட் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து நம் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளன. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ நான்காவது இடத்தில் உள்ளது.கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில், காற்று மாசு 7 சதவீதம் குறைந்துள்ளது.அதே நேரத்தில், உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள 20 நகரங்களில், 13 இந்தியாவைச் சேர்ந்தவை. இந்த, 20 நகரங்களில், 19 ஆசியாவைச் சேர்ந்தவை. இதைத் தவிர, மத்திய ஆப்ரிக்க நாடான சாட்டின் தலாநகர் நட்ஜமேனா இந்தப் பட்டியலில் உள்ளது.உலக அளவில் அதிக மாசுள்ள தலைநகரங்களில் புதுடில்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அதிக மாசுள்ள நகரங்கள் பட்டியலில், மேகாலயாவின் பிரினிஹாட் முதலிடத்தில் உள்ளது. அசாம் எல்லையை ஒட்டியுள்ள இந்த நகரத்தில் அதிகளவு தொழிற்சாலைகள் உள்ளன.இந்த சிறிய நகரில், இரும்பு, சிமென்ட், மதுபானம், சுத்திகரிப்பு என, 41 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியாகும் மாசை கட்டுப்படுத்த பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதால், வாகன நெரிசலும் சேர்ந்து, இந்த நகரை, உலகின் அதிக மாசுள்ள நகராக்கியுள்ளது,இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் புதுடில்லி உள்ளது. இதைத் தவிர, பஞ்சாபின் முல்லன்பூர், பரிதாபாத், லோனி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாண்டி, முசாபர்நகர், ஹனுமான்கர், நொய்டா ஆகியவை, அதிக மாசுள்ள 20 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
காற்று மாசுக்கு காரணமான பி.எம்., 25 எனப்படும் நுண்ணிய துகள்கள், 1 கன மீட்டரில், 5 மைக்ரோகிராம் அளவுக்கு இருப்பதே சுவாசிக்க சிறந்தது என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால், நம் நாட்டில், 35 சதவீத நகரங்களில், இந்த அளவைவிட, 10 மடங்கு அதிகம் உள்ளன.நம் நாட்டில் காற்று மாசு மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது. காற்று மாசு அதிகரிப்பதால், மக்களின் வாழ்நாள், 5.2 ஆண்டு வரை குறைவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடந்த 2009 முதல், 2019 வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 15 லட்சம் பேர், காற்று மாசு பிரச்னைகளால் உயிரிழந்துள்ளதாக, லான்செட் எனப்படும் சர்வதேச அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
24-Feb-2025