விளையாட்டில் குறையும் ஆர்வம் அமைச்சர் பரமேஸ்வர் ஆதங்கம்
பெங்களூரு: ''இன்றைய இளைஞர்கள் பலருக்கு, விளையாட்டில் ஆர்வம் குறைகிறது. மேஜர் தியான்சந்த் வழியை பின்பற்றாவிட்டால், இளம் விளையாட்டு வீரர்கள் வெற்றி அடைய முடியாது,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.நம் தேசிய விளையாட்டான ஹாக்கியின் ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளான நேற்று, பெங்களூரு கன்டீரவா விளையாட்டு அரங்கின் ஒலிம்பிக் பவனில், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பரமேஸ்வர் பேசியதாவது:இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு, எந்த பற்றாக்குறையும் இல்லை. ஆனால் சர்வதேச அளவில் நடக்கும் வெவ்வேறு விளையாட்டு போட்டிகளில், சாம்பியனாக முடியவில்லை; பதக்கங்களையும் பெற முடிவதில்லை. தங்கப்பதக்கம்
ஆப்பிரிக்கா உட்பட சிறிய நாடுகளில் விளையாட்டுக்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனாலும், அந்நாட்டினர் ஒலிம்பிக் போட்டிகளில், தங்கப்பதக்கம் பெறுகின்றனர். நம் நாட்டு இளைஞர்கள், மற்ற நாட்டினரை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. மன திடம், பிடிவாத குணம் இல்லாததால், தங்கப்பதக்கம் வெல்ல முடியவில்லை.தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அளிப்பதை போன்று, வேறு எந்த அரசுகளும் அளித்தது இல்லை. மாநிலத்தில் கன்டீரவா விளையாட்டு அரங்கில், 'சிந்தடிக் டிராக்' அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 18 மாவட்டங்களில், சிந்தடிக் டிராக் விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, சாதனை செய்தே தீருவோம் என்ற மன உறுதி வேண்டும்.நாட்டில் விளையாட்டுக்கு, அதிகமான ஊக்கம் கிடைக்கிறது. கத்தார் நாட்டின் தோஹாவில் எட்டு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய நாடுகள், விளையாட்டுக்கு, அதிகமான ஊக்கம் அளிக்கின்றன. முக்கியத்துவம்
இளைஞர்களிடம் விளையாட்டு மனோபாவத்தை வளர்ப்பதால், போதை மருந்து, குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவதை தவிர்க்கலாம். நாடும் ஆரோக்கியமாக இருக்கும். இதே காரணத்தால் இந்தியாவும், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.வரும் 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த, மத்திய அரசு முயற்சிக்கிறது. இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பித்தால், தீய பழக்கங்கள் விலகி செல்லும்.நான், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த போது, விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. போலீஸ் துறை நியமனத்திலும், இவர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா, அனைத்து துறைகளின் நியமனத்திலும், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து, ஊக்கம் அளிக்கிறார்.பெங்களூரு ஐ.டி., சிட்டி என, உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போன்று விளையாட்டிலும், கவனத்தை ஈர்க்க வேண்டும். தேவனஹள்ளி அருகில் 50 ஏக்கர் பரப்பளவில், ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரில் சர்வதேச அளவிலான மியூசியம் அமைப்பது குறித்து ஆலோசிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.