கலபுரகி: கலபுரகி லோக்சபா தொகுதியில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.யாத்கிர் குர்மித்கல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர், 44. பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி சேர்ந்தது ஆரம்பத்தில் இருந்தே சரணகவுடா கந்தகூருக்கு பிடிக்கவில்லை. கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி இருந்தார். அவரை காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்தன.கடந்த பிப்ரவரி மாதம் நடந்த, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போடவும், சரணகவுடா கந்தகூர் முடிவு எடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரிடம், குமாரசாமி சமாதானம் பேசியதால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளருக்கு ஓட்டு போட்டார்.அதன் பின்னர் மீண்டும் கட்சி நடவடிக்கையில் ஒதுங்கினார். லோக்சபா தேர்தலில் குர்மித்கல் சட்டசபை தொகுதி, கலபுரகி லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. கலபுரகியில் காங்கிரஸ் வேட்பாளராக, மல்லிகார்ஜுன கார்கே மருமகன் ராதாகிருஷ்ணா, பா.ஜ., வேட்பாளராக உமேஷ் ஜாதவ் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி, சரணகவுடா கந்தகூரிடம் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.ஆனால் இதுவரை பா.ஜ., சார்பில் யாரும், அவரிடம் ஆதரவு கேட்கவில்லை. இதனால் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, பா.ஜ., வேட்பாளர் வெற்றிக்கு உதவுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. அதனால் அவர் யாரை ஆதரிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.