உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு சொத்து பதிவுக்கு பொதுத்தளம் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் புதிய மசோதாவில் வருகிறது திருத்தம்

வக்பு சொத்து பதிவுக்கு பொதுத்தளம் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் புதிய மசோதாவில் வருகிறது திருத்தம்

புதுடில்லி, முஸ்லிம்கள், மதம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நன்கொடையாக அளிக்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகளை கண்காணிக்க, நிர்வகிக்க, மாநிலங்களில் வக்பு வாரியங்களும், தேசிய அளவில் வக்பு கவுன்சிலும் உள்ளன. இதைத் தவிர, வக்பு தீர்ப்பாயமும் உள்ளது.வக்பு வாரிய சட்டம், 1995ன்படி வக்பு சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக பல விதிகள் உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2013ல், இதில் பல விதிகள் தளர்த்தப்பட்டு, தாராளமயமாக்கப்பட்டது.தற்போது நாடு முழுதும், 9.4 லட்சம் ஏக்கர் பரப்புள்ள, 8.7 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்களிடம் உள்ளன. வக்பு வாரிய சொத்துக்கள் நிர்வாகத்தில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், மத்திய அரசு புதிய மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.இதில், வக்பு வாரிய சொத்துக்கள் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்யும் வகையில் பல பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு இந்த வாரியங்களில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட உள்ளது.கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், இந்த சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீர்திருத்த நடவடிக்கைக்கு, பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.நாட்டில், ரயில்வே மற்றும் ராணுவத்துக்குப் பின், அதிகளவு நிலங்கள், வக்பு வாரியங்களிடம் உள்ளன. ஆனால், இவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இது மிக மிகக் குறைவாகும். இதைத் தொடர்ந்தே, வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மசோதாவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்: குடும்ப சொத்துக்களில் முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் வக்பு சொத்துக்களை, சர்வே கமிஷனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்வர் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களில், முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவது உறுதி செய்யப்படும் போராக்கள் மற்றும் அகாகானிஸ்களுக்கென தனி வாரியம் அமைக்கப்படும் வக்பு வாரியங்களில், சன்னி, ஷியா, போரா, அகாகானிஸ் மற்றும் அந்த மதங்களின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடம்பெற வேண்டும் வக்பு சொத்துக்கள் அனைத்தும், பொதுவான மத்திய தளத்தின் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும். அதன் தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும் சொத்து பதிவு செய்யப்படுவதற்கு முன், வருவாய் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும். மேலும் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்படும் வக்பு சொத்துக்களுக்கு, இனி வக்பு வாரியங்கள் மட்டுமே அதிகாரம் உடையதாக இருக்காது வக்பு வாரியச் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்கள், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தளத்தில் பதிவிட வேண்டும் தீர்ப்பாயம் முறை திருத்தி அமைக்கப்படும். மேலும் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும்.இவ்வாறு வக்பு சொத்து நிர்வாத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் பல திருத்தங்கள் புதிய மசோதாவில் இடம்பெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ