நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில் சரக்கு ரயில் இன்ஜின் உதவியுடன் இயக்கம்
வாரணாசி, வாரணாசி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றதால், சரக்கு ரயில் இன்ஜின் உதவியுடன் அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.டில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் நேற்று காலை 6:00 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக, இந்த ரயில் பிற்பகல் 2:05 மணிக்கு வாரணாசிக்கு சென்றடையும்.ஆனால், இந்த ரயில் எட்டாவா அருகே நேற்று சென்றபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதி வழியில் நின்றது.தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயிலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.நீண்டநேரம் போராடியும் வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறினர்.இதன் காரணமாக, ரயிலில் அமர்ந்திருந்த பயணியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுதவிர, அந்த வழித்தடத்தில் வந்த ஏராளமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ரயில் போக்கு வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதையடுத்து, சரக்கு ரயில் இன்ஜினை பொருத்தி, பழுதாகி நின்ற வந்தே பாரத் ரயிலை அருகே உள்ள பர்தானா ரயில் நிலையத்திற்கு ரயில்வே ஊழியர்கள் இழுத்துச் சென்றனர். அதன்பின் பயணியரை, மாற்று ரயிலில் ரயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.