எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை; நான்கு பேரிடம் விசாரணை
அசோக்நகர்; பெங்களூரு சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் ஆதரவாளர் கொலை வழக்கில், நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெங்களூரு அசோக்நகர் ஆனேபாளையாவில் வசித்தவர் ஹைதர் அலி, 38. சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் ஆதரவாளர். கடந்த 23ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு கருடா மால் அருகே, மூன்று பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 56 இடங்களில் வெட்டு விழுந்தது, பிரேத பரிசோதனையில் தெரிந்தது.கொலையாளிகளை பிடிக்க அசோக்நகர் இன்ஸ்பெக்டர் தலைமையில், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலை நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில், நான்கு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.வழக்கு விசாரணை குறித்து, போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று கூறுகையில், ''ஹைதர் அலி கொலை தொடர்பாக, நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் பற்றி துப்பு கிடைத்து உள்ளது. விரைவில் கைது செய்யப்படுவர். வழக்கு விசாரணையில் இருப்பதால், கூடுதல் விபரங்களை கூற முடியாது,'' என்றார்.