புளியங்கொட்டையில் மூஷிக வாகனன்
பெலகாவி: பெலகாவியின் பழைய காந்தி நகரைச் சேர்ந்தவர் சுனில் சித்தப்பா ஆனந்தாச்சே. இவர் சுற்றுச்சூழலுக்கு உகந்த, விநாயகர் சிலைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.இம்முறை புதுமையான முறையில் விநாயகர் சிலையை தயாரித்துள்ளனர். செய்தித்தாள்கள், அட்டைகள், புல் மற்றும் புளியங்கொட்டைகளை பயன்படுத்தி, 8 அடி உயரமான அழகான விநாயகர் சிலையை உருவாக்கி உள்ளார்.தன் குடும்பத்தினர், சுற்றுப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன், 35,000 ரூபாய் செலவில் விநாயகர் சிலையை உருவாக்கினார். இதற்காக 2,21,111 புளியங்கொட்டைகள் பயன்படுத்தினார்.தன் அன்றாட பணிகளுக்கு இடையே, நேரம் ஒதுக்கி சிலையை தயாரித்தார். இதற்கு ஒரு மாதமானது.பிளம்பிங் பணி செய்யும் சுனில், பொழுதுபோக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்க ஆரம்பித்தார். ஆண்டுதோறும் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே தயாரிக்கிறார்.சுனில் கூறியதாவது:சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை. இதற்கு முன் அக்ரூட் பருப்புகள், பேப்பர் கப்புகள், மணல், உலர்ந்த பழங்கள், துணி பூக்கள், தானியங்கள், ருத்ராட்சம் என, பல்வேறு பொருட்களால், விநாயகர் சிலை தயாரித்தேன். இம்முறை புளியங்கொட்டையால் சிலை உருவாக்கினேன்.எட்டு அடி உயரம், நான்கு அடி அகலமான இந்த சிலையை கரைத்த பின், புளியங்கொட்டைகள் விதைக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.களிமண் அல்லது பி.ஓ.பி.,யால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால் பெலகாவியில், புளியங்கொட்டைகளை பயன்படுத்தி விநாயகர் சிலையை உருவாக்கி, கலைஞர் ஒருவர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.