புதுடில்லி, 'நீட்' தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு மீது மத்திய அரசு, என்.டி.ஏ., பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, மே 5ம் தேதி நாடு முழுதும் நடந்தது. இதில், 24 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், ஜூன் 4ம் தேதி வெளியாகின. இந்நிலையில், இந்த நீட் தேர்வில், கேள்வித்தாள் கசிந்ததாக முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது.இதுவரை இல்லாத அளவாக, 67 மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றனர். குறிப்பிட்ட, ஆறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, முழு கேள்வித்தாளையும் எழுத முடியாததால், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதுவே, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், முழு மதிப்பெண் பெறுவதற்கு காரணமானதாகவும், பல மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு பறிபோவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.இந்தப் பிரச்னை தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதில், அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், நீட் முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும்படி டில்லியில் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை மற்றும் சி.பி.ஐ.,க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதுபோல, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, நீட் தேர்வு தொடர்பான மனுக்களை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, என்.டி.ஏ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிலளிக்கும்படி, வழக்குகள் தொடர்ந்துள்ளோருக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. மற்ற வழக்குகளுடன் இணைத்து, ஜூலை 8ம் தேதி இந்த மனுக்களும் விசாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்போம்!'நீட்' தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களின் நலனையும் மத்திய அரசு பாதுகாக்கும். மிகவும் நேர்மையாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணப்படும். எந்த ஒரு குழந்தையின் எதிர்காலமும் பாதிக்க மத்திய அரசு அனுமதிக்காது.தர்மேந்திர பிரதான்மத்திய கல்வி அமைச்சர், பா.ஜ.,
தனியார் பயிற்சி நிறுவனங்கள்?
நீட் தேர்வு தொடர்பாக நிலவும் சர்ச்சைகளுக்கு தனியார் பயிற்சி நிறுவனங்களே காரணம் என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, மத்திய அரசின் கல்வித் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:இந்த ஆண்டு நுழைவுத் தேர்வில், மாணவர்களுக்கு சாதகமாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாடத்திட்டம், 15 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. மேலும், வினாத்தாள்களும் சுலபமாக வடிவமைக்கப்பட்டன.நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு நீக்கப்பட்டது. அதுபோல, எத்தனை முறை தேர்வு எழுதலாம் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்; அதிக மதிப்பெண்ணும் பெற்றனர்.பாடத்திட்டம் குறைந்ததால், நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை நாட வேண்டிய அவசியம் குறைந்தது. நகரங்களில் உள்ள மாணவர்கள், பயிற்சி மையங்களில் சேருவதற்கான வசதி, வாய்ப்புகள் இருக்கும். அதே நேரத்தில், கிராமத்தில் உள்ள மாணவர்களுக்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதைத் தவிர, இந்தாண்டு துவக்கத்தில் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, அந்தப் பயிற்சி மையங்களில் இருக்க வேண்டிய வசதிகள், பயிற்சி முறைகள், கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்தக் காரணங்களால், ஒரு பக்கம் மாணவர்கள் பயிற்சி மையங்களை நாட வேண்டிய அவசியம் குறைந்தது. மேலும் போதிய வசதிகள் இல்லாத பயிற்சி மையங்களில் தேர்வு விகிதம் குறைந்தது.தங்களுடைய வருவாய் மற்றும் எதிர்கால மாணவர் சேர்க்கை குறையும் என்ற அச்சத்தில், நீட் தேர்வை நடத்திய, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமைக்கு எதிரான பிரசாரத்தில், இந்த பயிற்சி மையங்கள் ஈடுபட்டிருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அவர்கள் தங்களுடைய சொந்த லாபத்துக்காக, நலனுக்காக, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களையும், பெற்றோரையும் துாண்டி விட்டு வருகின்றனர் என்ற சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.