| ADDED : மே 09, 2024 02:30 AM
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி அதன் அடுத்த கட்ட 'ஜெயில் கா ஜவாப் வோட் சே' என்ற தேர்தல் பிரசாரத்தை வரும் 13ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து, டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில ஒருங்கிணைப்பாளருமான கோபால் ராய் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்காக இதுவரை வீடு வீடாக பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும் டில்லியின் பல இடங்களில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வீடு வீடாகச் சென்று மக்களிடம் நியாயம் கேட்டோம். அதன் அடுத்தகட்டமாக வரும் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை 'சிறைத் தண்டனைக்கு உங்கள் ஓட்டு மூலம் பதில் அளியுங்கள்' என்ற பிரசாரம் நடத்தப்படுகிறது. மேலும், கிழக்கு டில்லியில் 'வர்த்தக டவுன் ஹால்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் வணிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். அதேபோல, புதுடில்லி தொகுதியில் 'மஹிளா சம்வாத்' என்ற நிகழ்ச்சியில் பெண்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். தெற்கு டில்லியில் 'பூர்வாஞ்சல் சமாகம்' மற்றும் மேற்கு டில்லியில் 'கிராமின் பஞ்சாயத்து' ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நான்கு நிகழ்ச்சிகளும் டில்லியின் மற்ற தொகுதிகளிலும் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் மூன்று தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் களம் இறங்கியுள்ளன. இங்கு, வரும் 25ம் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது.