கவுதம் நகர் வீடுகளுக்கு ஆன்லைன் பட்டா; தங்கவயல் நகராட்சி நாளை ஆலோசனை
தங்கவயல் : 'ஆன்லைன்' பட்டா விஷயத்தில் தீர்வு காண்பதற்காக, கவுதம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் நாளை, நகராட்சி முக்கிய ஆலோசனை நடத்துகிறது.தங்கவயல் நகராட்சி 31-வது வார்டில் உள்ள கவுதம் நகர் பகுதியில் 1,500 வீடுகள் உள்ளன. இதில் 1,000 வீடுகள், நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆக்கிரமிப்பு
கவுதம் நகரில் உள்ள அண்ணாசாமி லே - அவுட், சி.வி.பாபு லே - அவுட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீட்டு மனையாக விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது.தங்கவயல் நகராட்சி நிலம், முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று 1995ல் சட்டசபையில் பேசப்பட்டது.இதனால், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக, நகராட்சி துறை உத்தரவின்படி, 1995ம் ஆண்டிலேயே நகராட்சியில் வைக்கப்பட்டு இருந்த கவுதம் நகர், சுமதி நகர் பட்டா புத்தகங்களை மாநில லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர்.இதில் குறிப்பிட்டத்தக்க விஷயம் என்னவென்றால், நகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்ட வீடுகளின் பட்டாக்களும் கிடப்பில் கிடந்தது. இந்த பட்டா புத்தகம், லோக் ஆயுக்தா அலுவலகத்திலேயே முடங்கி கிடந்தது.குடியிருப்பு நல சங்கத்தினர், 2021ல் நடந்த லோக் அதாலத் கூட்டத்தில், பட்டா புத்தகத்தை தங்கவயல் நகராட்சியில் ஒப்படைக்க வேண்டும்; பட்டா புத்தகம் இல்லாததால் வீடுகளை விற்கவோ, வாங்கவோ, அடமானம் வைக்கவோ, வேறொருவர் பெயரில் மாற்றவோ முடியாமல் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, 27 ஆண்டுகளுக்கு பின், 2022ல் பட்டா புத்தகம், அப்போதைய தங்கவயல் நகராட்சி கமிஷனர் மாதவியிடம் ஒப்படைக்கப்பட்டது.நகராட்சி மூலம் ஏலத்தில் விடப்பட்ட மனைகளுக்கு மட்டுமே 'ஆன்லைன் பட்டா' பதிவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து, நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டிய, கவுதம் நகர் குடியிருப்பு நல சங்கத்தினர், நேற்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவை, அவரது விவேக்நகர் அலுவலகத்தில் சந்தித்தனர்.கவுதம் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 'ஆன்லைன்' பட்டா பதிவு செய்து தர கோரினர். இதையடுத்து, வரும் வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர், அதிகாரிகள், அப்பகுதியினருடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணலாம் என, எம்.எல்.ஏ., தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது, கவுதம் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவரும், டாக்டருமான விஜயகுமார், பொதுச்செயலர் ராஜேந்திரன், பேராசிரியர் சுப்பிரமணி, வாசு உட்பட சிலர் பங்கேற்றனர்.ஆன்லைன் பட்டா செய்து தருவதற்காக, 10,000 முதல் 1,00,000 ரூபாய் வரை முறைகேடாக பண வசூல் செய்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல மடங்கு வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வீட்டு வரி தொடர்பாக, 'நகராட்சி லோக் அதாலத்' நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.4_DMR_0010'ஆன்லைன்' பட்டா பதிவு குறித்து, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவிடம், தங்கவயல் கவுதம் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் முறையிட்டனர். இடம்: விவேக் நகர், ராபர்ட்சன்பேட்டை