மங்களூரு: வென்லாக் மருத்துவமனையில், விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு பின், விழித்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம், கைதிகள் வார்டின் ஜன்னல்களுக்கு சல்லடை வலை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது.தட்சிண கன்னடா, மங்களூரின், மஞ்சேஸ்வரா அருகில் உள்ள பந்த்யோடுவில் வசித்தவர் முகமது நவுபால், 24. இவர் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், 2022 டிசம்பரில் கோனாஜி போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமின் கிடைக்காததால் மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மன அழுத்தம்
போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த அவர், மன அழுத்தத்துக்கு ஆளாகி உடல்நிலை பாதிப்படைந்தார். ஏப்ரல் 25ல் மங்களூரின் வென்லாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது. அவரது உடல்நலம் தேறியதால், மே 7ம் தேதி அவரை 'டிஸ்சார்ஜ்' செய்ய, டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர்.ஆனால் அதற்கு முந்தைய நாள் அதிகாலை, அறை ஜன்னல் கம்பியில், போர்வையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பும், வென்லாக் மருத்துவமனையில் நோயாளிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கைதிகள் வார்டின் ஜன்னல்களுக்கு சல்லடை வலை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளனர்.மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:வென்லாக் மருத்துவமனையின் கைதிகள் வார்டின் வெளிப்புறம் போலீசார் காவலுக்கு இருப்பர். நோயாளிக்கு மருந்துகள் கொடுக்க, ஊசி போட வேண்டியிருந்தால் தான் நர்ஸ்கள், வார்டுக்கு செல்வர். நர்ஸ், போலீசார் வெளியில் இருப்பதால், வார்டுக்குள் என்ன நடக்கிறது என தெரிவது இல்லை. கைதி நோயாளிகள்
அவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தால், யாருக்கும் தெரியாமல் போகிறது. வார்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கைதி நோயாளிகளின் நடவடிக்கையை கவனிக்க, ஏற்பாடு செய்வோம்.கைதி தற்கொலை செய்து கொண்ட வார்டில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். நான்கு கைதிகள் உறக்கத்தில் இருந்தனர். காலையில் மற்ற கைதிகள் எழுந்து பார்த்த போது, ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. கைதிகள் வேண்டுகோளின்படி, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.இவ்வாறு அவர்கள்கூறினர்.