உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசோலை மோசடி வழக்கில் பத்மஜா ராவுக்கு 3 மாதம் சிறை

காசோலை மோசடி வழக்கில் பத்மஜா ராவுக்கு 3 மாதம் சிறை

மங்களூரு : காசோலை மோசடியில் ஈடுபட்ட பிரபல கன்னட நடிகை பத்மஜா ராவுக்கு, மூன்று மாதங்கள் சிறை தண்டனையும், 40.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மங்களூரு 4வது ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.பிரபல கன்னட நடிகை பத்மஜா ராவ், 52. இவர், 2006ல் ஹடவாதி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் கால் பதித்தார். அதன்பின், முங்காரு மலே, காலிபடா, தாஜ் மஹால், பெட்ரோமாக்ஸ் உட்பட 100க்கும் மேற்பட்ட குணசித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார். கடைசியாக, 2023ல் அம்புஜா திரைப்படத்தில் நடித்தார்.மேலும், வெவ்வேறு டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது, பாக்யலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில், 'வீரூ டாக்கீஸ்' நிறுவனத்தின் உரிமையாளரான மங்களூரு வீரேந்திர ஷெட்டியிடம், 2020 துவக்கத்தில், நடிகை பத்மஜா ராவ், 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு உத்தரவாதமாக, 2020 ஜூன் 17ம் தேதியிட்ட காசோலையை நடிகை வழங்கியுள்ளார்.குறிப்பிட்ட தேதியில், நடிகை தந்த காசோலையை, வீரேந்திர ஷெட்டி, தன் வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால், போதுமான பணம் இல்லாததால், அந்த காசோலை, 'பவுன்ஸ்' ஆகிவிட்டது.இது குறித்து நடிகைக்கு தகவல் தரப்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி, 2020 ஜூன் 30ம் தேதி, நோட்டீஸ் அளித்தார். ஆனாலும் நடிகை பணம் தரவில்லை.இதையடுத்து, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு 8வது ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில், நடிகை பத்மஜா ராவ், காசோலை மோசடி செய்துள்ளதாக கூறி வீரேந்திர ஷெட்டி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பயாஜ், நேற்று தீர்ப்பளித்தார்.இதன்படி, பத்மஜா ராவுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனையும், 40.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதில், 40.17 லட்சம் ரூபாயை மனுதாரர் வீரேந்திர ஷெட்டிக்கும்; 3,000 ரூபாயை அரசுக்கும் வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை