பார்க்கிங் தகராறு: விஞ்ஞானியை அடித்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்
சண்டிகர் பஞ்சாபில், வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறின்போது, கீழே தள்ளிவிடப்பட்ட இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் பலியானார்.ஜார்க்கண்ட்டை சேர்ந்த அபிஷேக் ஸ்வர்ன்கர், 39, பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார். அங்கு, தன் பெற்றோருடன் அவர் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் பணி முடிந்து வீடு திரும்பிய அபிஷேக், தன் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதற்கு, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மோன்டி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதன் முடிவில், அபிஷேக்கை மோன்டி கீழே தள்ளிவிட்டார். காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அபிஷேக் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கீழே தள்ளிவிட்டதில் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அபிஷேக் பலியானதை அடுத்து, மோன்டி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.