செபி தலைவர் மாதவியிடம் விசாரிக்க பார்லி., பொது கணக்கு குழு முடிவு
புதுடில்லி, 'செபி' தலைவர் மாதவி புரி புச் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்த பார்லி., பொதுக் கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.'செபி' எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக இருப்பவர் மாதவி புரி புச். இவரும், கணவர் தவல் புச் ஆகியோரும், அதானி குழுமத்தின் சட்ட விரோத முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதை, மாதவி திட்டவட்டமாக மறுத்தார்.இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், செபி தலைவராக இருந்து கொண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., தனியார் வங்கி நிறுவனத்திடம், அவர் 17 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக காங்., குற்றஞ்சாட்டியது.இந்நிலையில், மாதவி புரி புச் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்த, பார்லி., பொதுக் கணக்கு குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.வரும் 10ல் பொதுக் கணக்கு குழுவின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அக்குழுவின் தலைவரும், காங்., - எம்.பி.,யுமான வேணுகோபால் நேற்று கூறுகையில், “பார்லி., சட்டங்களால் நிறுவப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் செயல்திறனை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்.“மாதவி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, அவருக்கு சம்மன் அனுப்புவது குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும்,” என்றார். இதற்கிடையே, 2018 - 2024க்கு இடையில், வோக்கார்ட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்த, கரோல் இன்போ சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, 2.16 கோடி ரூபாய் வாடகை வருமானமாக, மாதவி பெற்றதாக, காங்., ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா குற்றஞ்சாட்டினார்.