-அபாய நிலையை எட்டிய காற்று மாசு ஆனந்த் விஹாரில் அவதிப்படும் மக்கள்
புதுடில்லி,:தலைநகர் டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயநிலையை எட்டியுள்ள நிலையில் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு, தொண்டையில் தொற்று, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.டில்லியில் மாசு அதிகமுள்ள பகுதிகளில் ஆனந்த் விஹார் முதலிடத்தை வகிக்கிறது. டில்லியின் சராசரி காற்றின் தரக்குறியீடு நேற்று காலை 8:30 மணிக்கு 389 ஆக இருந்தது. அதுவே, ஆனந்த் விஹாரில் 419 ஆக பதிவாகியிருந்தது. இது, மிகவும் அபயகரமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.ஆனந்த் விஹார் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் ஜாவேத் அலி, “காற்றில் மாசு அதிகரித்துள்ளதால் கண் எரிச்சல் அடங்கவே இல்லை. பார்வையும் மிகவும் மங்கலாகி விட்டது. வண்டி ஓட்டுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. முகக்கவசத்தையும் நீண்ட நேரம் அணிய முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது,”என்றார்.வீட்டு வேலை செய்யும் சுனிதா, “பல நாட்களாக இடைவிடாத இருமல் ஏற்பட்டுள்ளது. அதோடு கண் எரிச்சலும் குறையவில்லை. டாக்டர்கள் ஆலோசனைப் படி மருந்து எடுத்துக் கொண்டாலும் நிவாரணம் கிடைக்கவில்லை,”என்கிறார்.இரண்டு குழந்தைகளின் தாய் சுப்ரியா யாதவ், “குழந்தைகளின் உடல்நிலை மிகவும் கவலை அளிக்கிறது. வயிற்றுப் பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் மிகமோசமான நிலை ஏற்படுகிறது. தூக்கிக் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறேன். பல டாக்டர்களைப் பார்த்து விட்டேன். ஆனால், எந்த மருந்தும் நிரந்தர குணம் தரவில்லை. அவ்வப்போது சரியாகிறது. பிரச்னை மீண்டும் தலைதூக்கி விடுகிறது. குடிநீரின் தரம் மிக மோசமாக இருப்பதே இதற்கு காரணம் என்கின்றனர். காய்ச்சி குடித்தாலும் வயிற்றுப் பிரச்னை ஏற்படுகிறது. என் வசதிக்கு பணம் கொடுத்து மினரல் வாட்டர் கேன் வாங்க முடியாது,”என்றார்.ஆனந்த விஹார் பஸ் ஸ்டாண்டுக்கு அண்டை மாநில டீசல் பஸ்கள் வந்து செல்வது, ரயில் நிலையம் அமைந்திருப்பதும் மாசு அளவு அதிகரிக்க மிக முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.ஆனந்த் விஹார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் ஊழியர் ஹரேந்திர சிங், “தினமும் 10 மணி நேரம் பஸ் ஸ்டாண்டில்தான் இருக்கிறேன். முகக்கவசம் அணிந்தாலும் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் மற்றும் இருமல் தொடருகிறது,”என்கிறார். இதய நோயாளியான நிர்மல் சிங்,70, கூறியதாவது:நான் இதே பகுதியில்தான் பிறந்து வளர்ந்தேன். இந்த 70 ஆண்டுகளில் இந்த ஆண்டைப் போல காற்று மாசு அதிகரிப்பை உணர்ந்தது இல்லை. இப்போது மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கிறது. அதிகாலை அல்லது மாலை நேரத்தில் மிகவும் சிரமப்படுகிறேன். குடிநீரும் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அரசு இந்த விஷயத்தில் ஆனந்த விஹார் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.