தனி நபர் அரசியலாக மாறும் அரசியல் கட்சிகள் போராட்டம்
'மூடா' முறைகேடுக்கு பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையாவை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், பெங்களூரில் இருந்து, மைசூரு வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.எதிர்க்கட்சியினரின் இந்த பாதயாத்திரையை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், 'மக்கள் இயக்கம்' என்ற பெயரில், பெங்களூரு முதல், மைசூரு வரை முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இரண்டு தரப்பிலுமே, மற்றவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை குறிப்பிட்டு போராட்டம் நடத்துவர் என்று அறிவித்தனர். ஆனால், தற்போது போராட்டம் திசை மாறி செல்வதை காண முடிகிறது.எதிர்க்கட்சி தரப்பில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, ஆளுங்கட்சி தரப்பில் துணை முதல்வர் சிவகுமார் தரப்பு இடையேயான அரசியல் யுத்தமாக மாறி வருகிறது.அதுவும் ஒவ்வொருவரும் எவ்வளவு முறைகேடு சொத்து சேர்த்துள்ளனர் என்பது தான் அவர்களின் குற்றச்சாட்டு. ஆனால், யார் ஆட்சி காலத்தில், மக்களுக்காக என்னென்ன நல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து, ஒருவர் கூட பேசவில்லை.அவர் தான் அதிகமாக கொள்ளை அடித்து, சொத்து சேர்த்தார் என்று குமாரசாமியும்; இல்லை, அவர் தான் அதிகமான முறைகேடு சொத்து சேர்த்துள்ளார் என்று சிவகுமாரும் மாறி மாறி பேசுகின்றனர்.கட்சிகள் தரப்பில் நடந்து வரும் போராட்டம், இப்படி தனி நபர் குற்றச்சாட்டுக்கு பலியாகி வருகிறதே என்று காங்கிரஸ் மேலிடமும், பா.ஜ., மேலிடமும் யோசிக்கிறது. இதனால், யாருக்குமே பலனில்லை.இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது, இரு தரப்பு போராட்டங்களும் மைசூரு மண்டலத்தில் நடக்கிறது. இங்கு, ஒக்கலிகர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குமாரசாமியும், சிவகுமாரும் ஒக்கலிகர்கள் என்பதால், அச்சமுதாயத்தில் தங்களை தலைவராக மதிக்க வேண்டும் என்று இருவரும் விரும்புகின்றனர். தங்கள் பலத்தை காண்பிக்கும் வகையில், ஒருவர் மீது, மற்றொரு குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதில், காங்., அரசின் ஊழல்கள் குறித்து பேசுவது குறைந்து விட்டது.- நமது நிருபர் -