உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து சாதனத்திலும் இந்திய சிப் இருக்க வேண்டும் பிரதமர் மோடி விருப்பம்

அனைத்து சாதனத்திலும் இந்திய சிப் இருக்க வேண்டும் பிரதமர் மோடி விருப்பம்

கிரேட்டர் நொய்டா, ''உலகெங்கும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு சாதனங்களிலும், இந்தியாவில் தயாரான, 'செமி கண்டக்டர்' எனப்படும் 'சிப்' இருக்கும் நிலையை எட்ட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.அனைத்து வகை மின்னணு சாதனங்களும் இயங்குவதற்கு, அதில் உள்ள செமி கண்டக்டர் எனப்படும் சிப் முக்கியமானதாகும். செமி கண்டக்டர் துறை உற்பத்தியில் தற்போது மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில், செமிகான் எனப்படும் செமி கண்டக்டர் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.வினியோக தொடர்கருத்தரங்கை நேற்று துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:கொரோனா பரவல் காலத்தில் வினியோகத் தொடரில் ஏற்பட்ட பாதிப்பே, உலகெங்கும் மிகப் பெரும் பிரச்னைக்கு காரணமானது. இதனால், பல பொருட்கள் கிடைக்காமல், உலகின் பல நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டன. இவை, பொருட்களின் வினியோகத் தொடரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தன.அதிலும் குறிப்பாக, சிப்கள் கிடைக்காததால், மின்னணு பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டன. சிப் தயாரிப்பில் இந்தியா பெரிய அளவில் இறங்கிஉள்ளது.இந்தத் துறையில் இதுவரை, 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, பல புதிய முதலீட்டு திட்டங்கள் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.சிப்கள் தயாரிப்பின் மையமாக இந்தியா மாற வேண்டும். உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மின்னணு சாதனத்திலும், இந்தியாவில் தயாரான சிப் இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.சிப்கள் தொடர்பான வினியோக சங்கிலியில் எங்காவது பாதிப்பு ஏற்பட்டால், இந்தியாவை நம்பலாம் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். சிப் தயாரிப்பு தொடர்பாக, 85,000 இன்ஜினியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.இவர்கள், உலகின் செமி கண்டக்டர் துறையின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பயிற்சிகளை பெற்றுள்ளனர்.புதிய வேலைவாய்ப்புகள்இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள், உறுதியான கொள்கை முடிவுகள், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் சந்தை என, இந்தத் துறையில் முதலீடு செய்வதற்கு இந்தியா மிகச் சிறந்த நாடாக உள்ளது.மின்னணு சாதனங்கள் உற்பத்தி அனைத்தும் இந்தியாவில் நடக்கும் நிலையையும் ஏற்படுத்த வேண்டும்.தற்போது இந்தத் துறையில், இந்தியாவின் பங்கு 12.6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இதை, 419 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்திட வேண்டும். இதன் வாயிலாக, 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை