உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்துக்கு முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்துக்கு முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

விக்ரம்நகர்:பிரதமரின் காப்பீடு திட்டத்துக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.டில்லி சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலை ஒட்டி அப்போதைய ஆளும் கட்சியான ஆம் ஆத்மி ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. காங்கிரஸ் கட்சியும் அதிரடி வாக்குறுதிகளை அளித்து, வாக்காளர்களை கவர முயன்றது.இந்த இரு கட்சிகளை சமாளிக்கும் வகையில் பா.ஜ., தரப்பில் ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்த பட்டியலில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளில் பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டமும் ஒன்று.இந்த திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்தாமல் முந்தைய ஆம் ஆத்மி அரசு அரசியல் செய்து வந்ததாக பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.தேர்தலில் 48 இடங்களில் வென்று ஆட்சியை 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ., மீண்டும் கைப்பற்றியது. நேற்று முன்தினம் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.அவர் தலைமையில் ஆறு அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன் பின், வசுதேவ் காட் பகுதியில் யமுனா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பர்வேஷ் சிங் வர்மா, கபில் மிஸ்ரா, ரவீந்தர் குமார் இந்திரஜ், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.அத்துடன் ஆம் ஆத்மி அரசு நிலுவையில் வைத்திருந்த 14 சி.ஏ.ஜி., அறிக்கைகளை முதல் சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ரேகா குப்தா பேசுகையில், “முந்தைய ஆம் ஆத்மி அரசு, நகரத்தில் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தை அனுமதிக்கவில்லை. அதன் பலன்களை மக்கள் பெறவிடாமல் அந்த அரசு தடுத்தது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிபடி முதல் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசின் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை