சிகரெட், பீடி கேட்டு கைதிகள் போராட்டம்
பெங்களூரு: சிறையில் நடிகர் தர்ஷன் சிகரெட் பிடிக்கும் படம் வெளியானதால், தங்களுக்கும் சிகரெட், பீடி வேண்டுமென கேட்டு, பெலகாவி சிறைக் கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் சிறை அதிகாரிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.தனக்கு நெருக்கமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதற்காக, சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.முதலில் பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறையில் ராஜ உபசாரம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.தர்ஷன் சிகரெட் புகைக்கும் படம், சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சைக்கு காரணமானது. இதனால் அவர் பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகளுக்கு, புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியின் ஹிண்டல்கா சிறையில் உள்ள கைதிகள், 'எங்களுக்கும் பீடி, சிகரெட் கொடுங்கள்' என, போர்க்கொடி உயர்த்திஉள்ளனர்.'எங்களின் வேண்டுகோள் நிறைவேறும் வரை, உணவருந்த மாட்டோம்' என, நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியதாக, தகவல் வெளியாகியுள்ளது.