உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசபக்தர் என கூறுபவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பயப்படுகின்றனர்

தேசபக்தர் என கூறுபவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பயப்படுகின்றனர்

புதுடில்லி: “தங்களை தேசபக்தர்கள் என கூறிக் கொள்பவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு எனும் 'எக்ஸ் - ரே'க்கு பயப்படுகின்றனர்,” என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். டில்லியில் காங்கிரஸ் சார்பில் சமூக நீதி மாநாடு நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் எம்.பி., ராகுல் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பேசியதாவது:மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பின் வாயிலாக நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்து, எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய முடியும். ஆகையால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் அமல்படுத்துவோம். நான் ஆர்வமாக இல்லை. அரசியலில் தீவிரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நான் ஆர்வம் காட்டிய நிலம் கையகப்படுத்தும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்றவை சீரியசான விவகாரங்கள் இல்லையா? உங்கள் கைகளில் 'லவுட் ஸ்பீக்கர்' இல்லை என்றால், நீங்கள் என்ன பேசினாலும், அது ஆர்வம் இல்லாதது என்றே கூறப்படும். ஊடகங்கள், நீதித் துறை, தனியார் மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றில் ஓ.பி.சி., பட்டியலின மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். ராமர் கோயில், புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவிற்கு, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு அழைப்பில்லை. நாட்டின் முதல் 200 நிறுவனங்களில் தலித், பழங்குடியினர் அல்லது ஓ.பி.சி., பிரிவினரே இல்லை. விவசாயிகளின் கடனை 25 முறை தள்ளுபடி செய்தால், அந்த பணத்தை பிரதமர் தன் நண்பர்கள் 25 பேருக்கு வழங்குகிறார். விரைவில் அதில் ஒரு சிறிய தொகை மீட்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு வழங்கப்படும். ஒரு தேசபக்தியுள்ள நபர் இந்தியாவுக்கு நல்லது செய்ய வேண்டும். அதற்காக நாம் 90 சதவீத மக்கள்தொகையின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். பிரதமர் மோடி அனைவரிடமும் தான் ஓ.பி.சி., என கூறுகிறார். நான் ஜாதிவாரி கணக்கெடுப்பை பற்றி பேச துவங்கியதும், ஜாதி இல்லை என்கிறார். பணக்காரர், ஏழை என இரண்டே ஜாதிகள் உள்ளதாக கூறுகிறார். தேசபக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு எனும் எக்ஸ்-ரேக்கு பயப்படுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, 'தன் தொழிலதிபர் நண்பர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாயை மோடி தள்ளுபடி செய்துள்ளதை நாடு மன்னிக்காது' என ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:நரேந்திர மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்த பணத்தில், 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானத்துடன் வேலை கிடைத்திருக்கும். நாட்டில் உள்ள 16 கோடி பெண்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வேலை கிடைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கும். வெறும் 400 ரூபாய் மதிப்பில், 20 ஆண்டுகளுக்கு காஸ் சிலிண்டர்களை நாட்டு மக்களுக்கு வழங்கி இருக்கலாம். ராணுவத்தின் மொத்த செலவையும் மூன்று ஆண்டுகளுக்கு ஏற்றிருக்கலாம். தலித், பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'அம்பானி - அதானிக்காக மோடி வாழ்கிறார்'

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள அப்சல்பூரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:காங்கிரஸ் குடும்பம் நாட்டை கொள்ளையடித்து விட்டதாக நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். நீங்கள்தானே பிரதமர், அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டு இருந்தால், அதை மீட்டு தாருங்கள். இந்த நாட்டில் இரண்டு விற்பனையாளர்கள் மற்றும் இரண்டு வாங்குபவர்கள் உள்ளனர். விற்பவர்கள் மோடி மற்றும் ஷா மற்றும் வாங்குபவர்கள் அம்பானி மற்றும் அதானி. மோடியும் ஷாவும் அம்பானி மற்றும் அதானிக்காக வாழ்கின்றனர். நாட்டு மக்களுக்காக அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ