பெண்கள் வெற்றிக்கு பின் போராட்டங்கள்; சர்வதேச மகளிர் தின விழாவில் நெகிழ்ச்சி
தங்கவயல் : ''ஒரு ஆண் வெற்றிக்கு பின்னால் பெண்ணும், பெண்ணின் வெற்றிக்கு பின்னால் பல போராட்டங்களும் உள்ளன,'' என்று பி.இ.எம்.எல்., பெண்கள் நல இயக்கத் தலைவர் விஜயா சுப்பிரமணியம் தெரிவித்தார். பி.இ.எம்.எல்., எனும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெண்கள் நல்வாழ்வு இயக்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின விழாவை, நேற்று அதன் கிளப்பில் கொண்டாடினர்.இயக்க புரவலர் பியாலி சாந்தனு பேசுகையில், ''பெண்களுக்கு சுதந்திரம், அதிகாரம் அளிப்பது முக்கியம். சமூக கட்டுகளில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். அவர்களின் வளர்ச்சிக்கு கல்வி கற்க வேண்டும். ''தங்கள் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த செயல், சமூகத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.இயக்கத் தலைவர் விஜயா சுப்பிரமணியம் பேசுகையில், ''பெண்கள் சமூக சிந்தனையுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்ணும், பெண்ணின் வெற்றிக்கு பின்னால் போராட்டங்களும் உள்ளன. தங்கள் முன்னேற்றத்துக்கான சபதம் எடுத்து கொள்ள வேண்டும்,'' என்றார். பி.இ.எம்.எல்., நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் அனுப்பிய வாழ்த்து செய்தியை, அவர் வாசித்தார்.பெண் ஊழியர்களின் திறன்கள், ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், அவர்கள் உருவாக்கிய கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மனித வளத்துறை தலைவர் டாக்டர் விஜயலட்சுமி மீனா சிங், பி.இ.எம்.எல்., அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை டாக்டர் மீனாட்சி தொகுத்து வழங்கினார். மீனா வரவேற்றார். டாக்டர் ஷர்மிளா நன்றி கூறினார்.