உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக தமிழர்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள் புத்தக திருவிழா நிறைவில் ராம்பிரசாத் மனோகர் பேச்சு

கர்நாடக தமிழர்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள் புத்தக திருவிழா நிறைவில் ராம்பிரசாத் மனோகர் பேச்சு

பெங்களூரு, டிச. 30-''கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்று, தமிழ் புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பேசினார்.கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், பெங்களூரில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த, தமிழ் புத்தக திருவிழா நேற்று நிறைவு பெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதில் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:

பஞ்சம் வரும்

புத்தக திருவிழாவை 10 நாட்களும் சீரும், சிறப்புமாக நடத்துவது எளிதாக விஷயம் இல்லை. வெகுதுாரத்தில் இருந்து தமிழ் சொந்தங்களை காண இங்கு வந்து உள்ள, அனைவருக்கும் எனது வணக்கம். முதல் ஆண்டு புத்தக திருவிழா துவங்கும் முன்பு, என்ன பெயர் வைப்பது என்று யோசித்தோம். தமிழ் புத்தக கண்காட்சி என்று வைத்தால், கண்காட்சியாக மாறிவிடும். தமிழ் புத்தக சந்தை என்று வைத்தால், சந்தை போல ஆகிவிடும். இதனால் தமிழ் புத்தக திருவிழா என்று பெயர் வைத்தோம்.அயலக தமிழர்களாக இங்கு வாழும் தமிழர்கள், அனைவரும் புலிகுட்டி போன்றவர்கள். மொழி, இலக்கியம், பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்பது தான், இந்த புத்தக திருவிழாவின் முக்கிய நோக்கம். இங்கு வாழ வந்து உள்ள தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஏன் தமிழ் கற்று தர வேண்டும் என்று நினைக்கின்றனர்.தமிழுக்கும், மற்ற மொழிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆங்கிலத்தில் ஒரு ரைம்ஸ் உள்ளது. 'ரெயின் ரெயின் கோ அவே' என்று. மழையே போ... போ என்று சொல்வது நல்லதா. மழை இல்லாவிட்டால் பஞ்சம் வந்து விடும்.

புலி குட்டி

இந்த தலைமுறையினருக்கு எதையும் எதிர்கொள்ளும் தைரியம் இல்லை. இதற்கு கல்வி அமைப்பு முறை தான் காரணம். உலகமே எதிர்த்து நின்றாலும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு தமிழ் படிக்க வேண்டும். கர்நாடக தமிழர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழ் வரலாறை நாம் படிக்க வேண்டும். நமது வரலாறு மீட்டெடுக்கப்படவில்லை என்றால் புதைக்கப்படும், மறைக்கப்படும்.கம்போடியா நாட்டிற்கு அரசு வேலையாக சென்றேன். அங்கு உள்ள 1,000 ஆண்டு கோவிலை பார்த்து பிரமித்து போனேன். அந்த கோவிலை கட்டியது சோழர்கள். சோழர்கள் வம்சத்தில் வந்த புலிகுட்டிகள் நாம். நாம் அனைவரும் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். தமிழ் இனத்தில் பிறப்பது சிறப்பு. கல்வியில் முன்னேறுவோம். தமிழ் புத்தக திருவிழா அடுத்த நிலைக்கு எடுத்து செல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடக மாநில மூலிகை செடிகள் ஆணைய தலைமை செயல் அலுவலரும், தமிழருமான வெங்கடேசன் பேசுகையில், ''தமிழ் என்றாலே அழகு தான். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, தமிழ் புத்தக திருவிழா நடப்பது சிறப்பு. நான் மூன்று ஆண்டுகளும் கலந்து கொண்டேன். 'வாங்க பாஸ் வாழ்க்கையை கொண்டாடலாம்' என்ற புத்தகம் எழுதி உள்ளேன். தமிழ் மிகவும் பழமையான மொழி. ஆனால் இன்னும் மாறவில்லை. எனது மகன், மகளுக்கும் தமிழ் தெரியும். எனது மகன் தேனி மருத்துவ கல்லுாரியில் படிக்கிறார். ஆன்லைன் பழக்கம் அதிகரித்து உள்ள காலத்தில், புத்தகம் ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. புத்தகம் படிப்பது மனசோர்வு நீக்கும்,'' என்றார்.சுங்கதுறை முன்னாள் கூடுதல் இயக்குனர் மணிவாசகம் பேசுகையில், ''புத்தக திருவிழாவை 10 நாட்களும், சிறப்பாக நடத்தி உள்ளீர்கள். நான், நான்கு நாட்கள் இங்கு வந்தேன். சில புத்தகங்கள் வாங்கினேன். தமிழர்கள் எப்படியும் வாழ முடியும் என்று, இங்கு வசிக்கும் தமிழர்கள் நிரூபித்து உள்ளீர்கள். பெங்களூரில் 25 ஆண்டுகள் வசிக்கிறேன். ஓய்வு பெற்ற பின், நிறைய தமிழ் சொந்தங்கள் எனக்கு கிடைத்து உள்ளனர்,'' என்றார்.

வேஷ்டி, சட்டை

தமிழ் புத்தக திருவிழா நிறைவு நிகழ்ச்சிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் வெள்ளை சட்டை, பட்டு வேஷ்டி அணிந்து வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழர் பராம்பரிய உடையை அவர் அணிந்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ராம்பிரசாத் மனோகரின் சொந்த ஊர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை