மாண்புமிக்க மனைவியரை மதிக்கிறோம் முப்பெரும் விழாவில் கணவர்கள் நெகிழ்ச்சி
ஸ்ரீராமபுரம்: 'தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியின் 114வது பிறந்த நாள்; ஸ்ரீ ராமபுரம் ஸ்கை டிரஸ்ட் ஆண்டு விழா; மனைவிக்கு பாராட்டு என்ற மனைவி நல வேட்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள டிரஸ்ட் அலுவலகத்தில் நடந்தது.மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குண்டுராவ் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் அருள்நிதி பேசுகையில், ''தொடர் சமூகப் பணிகள், காலை-, மாலை நேரத்தில் யோகா வகுப்புகள், மனவளர்ச்சிப் பயிற்சி, வாழ்க்கைக் கல்வி, பட்டப் பணிகளுக்கான பயிற்சி ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பயிற்சிகளில் குடும்ப தலைவிகளுடன் ஆண்களும் பயன்பெற்று வருகின்றனர். டிரஸ்டிற்கு, பெங்களூரு மாநகராட்சி இடம் வழங்கி உள்ளது,'' என்றார்.மன்றப் பணிகளில் உலக சமுதாய சேவா சங்க - கர்நாடக கிளை செயலர் நாகராஜ், மாநில காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு மாநில தலைவர் ராஜ் கார்த்திக் பேசினர்.தொடர்ந்து, மன வளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நடந்த மனைவிக்கு பாராட்டு விழா, பெண்மையின் மகத்துவத்தை உணர்த்திய நிகழ்ச்சியாக அமைந்தது.ஒவ்வொரு ஆணும், வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்த, ஆண்டுதோறும் ஆக., 30ம் தேதி மனைவி நல வேட்பு விழாவை அறிமுகம் செய்தவர், வேதாத்திரி மகரிஷி. இந்நாள், அவரது மனைவி லோகாம்பாள் பிறந்த தினம்.தம்பதியாக பங்கேற்றவர்களில் கணவர்கள் அவர்களின் மனைவியின் கண்களை பார்த்து, பெற்றோரை, பிறந்தகத்தை, பிறந்த ஊரை விட்டு பிரிந்து வந்து பெருநோக்கில் கடமையறம் ஆற்ற பற்றற்ற துறவியென குடும்பத் தொண்டேற்று பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய் கொண்டு, என் நற்றவத்தால், என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை நல நோக்கில் அன்போடு கருணையிவை கொண்டு மற்றவருக்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன் மனைவியை நான் மதிக்கிறேன்; வாழ்த்தி மகிழ்கிறேன்' என்றனர்.ஒரே இடத்தில், 50 தம்பதியர் பங்கேற்றனர். பரஸ்பரம் மாலை பரிமாறி, மனைவியின் கரங்களில் மலரைக் கணவரும், கணவரின் கரங்களில் கனியை மனைவியும் வழங்கினர்.மன்ற செயலர் விவேகானந்தன் நன்றி கூறினார்.முப்பெரும் விழாவில் பங்கேற்ற மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவை, ஸ்கை டிரஸ்டியினர் கவுரவித்தனர். இடம்: ஸ்ரீராமபுரம், பெங்களூரு.