உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேவண்ணாவின் மற்றொரு மகன் சூரஜுக்கு... சி.ஐ.டி., காவல்! ஜூலை 1 வரை காவலில் வைக்க உத்தரவு

ரேவண்ணாவின் மற்றொரு மகன் சூரஜுக்கு... சி.ஐ.டி., காவல்! ஜூலை 1 வரை காவலில் வைக்க உத்தரவு

பெங்களூரு : வாலிபர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் விசாரணைக்காக, ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ், ஜூலை 1ம் தேதி வரை, சி.ஐ.டி., காவலில் ஒப்படைக்கப்பட்டார். பெண்களை பலாத்கார செய்த வழக்கில், அவரது தம்பி பிரஜ்வல், நீதிமன்ற காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா. இவரது மூத்த மகனும், ம.ஜ.த., - எம்.எல்.சி.,யுமான சூரஜ், 36, மீது, அரிசிகெரேவைச் சேர்ந்த ஒரு வாலிபர் பாலியல் புகார் அளித்தார். சூரஜ், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக, ஹொளேநரசிபுரா போலீசில் அவர் கூறியிருந்தார்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, நீதிமன்ற காவலில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

எட்டு நாட்கள்

இதற்கிடையில், பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், நேற்று காலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால், தங்கள் காவலில் 10 நாட்களுக்கு ஒப்படைக்கும்படி, சி.ஐ.டி., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நீதிபதி கே.என்.சிவகுமார், ஜூலை 1ம் தேதி வரை, எட்டு நாட்கள் சி.ஐ.டி., காவல் வழங்கி உத்தரவிட்டார்.இதற்கிடையில், அவரது தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல், 33, என்பவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள், ஹெளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளது.

சிறையில் பிரஜ்வல்

இதில், இரண்டு வழக்குகள் மீது ஏற்கனவே விசாரணை நடத்தி, பரப்பன் அக்ரஹாரா மத்திய சிறையில், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.அவரை, மூன்றாவது பலாத்கார வழக்கின் கீழ், இம்மாதம் 19ம் தேதி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, தங்கள் காவலில் எடுத்தனர். நேற்றுடன் எஸ்.ஐ.டி., காவல் முடிந்த நிலையில், அதே நீதிமன்றத்தின் நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிரஜ்வல்லை, ஜூலை 8ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் ஒப்படைத்து, நிதிபதி கே.என்.சிவகுமார் உத்தரவிட்டார்.

அண்ணன் - தம்பி

அடுத்தடுத்து வழக்குகள் என்பதால், நீதிமன்ற வளாகத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் கவலையாக இருந்ததை காண முடிந்தது.பின், சூரஜை, சி.ஐ.டி., அதிகாரிகள், விசாரணைக்காக அழைத்துச் சென்றார். பிரஜ்வலை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பரப்பன அக்ரஹாரா அழைத்துச் சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.ஜாமின் கோரி பிரஜ்வல் தாக்கல் செய்த மனுவும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாமின் கிடைக்குமா, கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரே சிறையில் தந்தை, மகன்கள்

வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, ஏற்கனவே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் ஜாமினில் வெளியே உள்ளார்.அதன் பின், இதே சிறையில் அவரது இளைய மகன் பிரஜ்வல் அடைக்கப்பட்டார். தற்போது, மூத்த மகன் சூரஜும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை