| ADDED : மார் 23, 2024 07:00 AM
பெங்களூரு: ''மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது எனக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் ஏமாற்றம் அளித்துள்ளது,'' என லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.புதுடில்லியில் மதுபான கொள்கை வழக்கில், அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இது தொடர்பாக, கர்நாடக லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது:அதிகார பேராசை, அவரை நன்றாக பிடித்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. அவர் மீது இருந்த நம்பிக்கை எனக்கு முற்றிலும் ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆத் ஆத்மி அதிகாரத்துக்கு வந்தவுடன், சட்டத்தை நிலைநாட்டும் என்று நினைத்தேன். அதிகாரம் முற்றிலும் சிதைந்துவிட்டது.இன்று அரசியல் என்பது ஊழலின் குகை. இதில் எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. 'ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம்' அரசில் ஊழலுக்கு எதிராக போராடுகிறது. இதுவே எங்களின் தத்துவம்.இந்த இயக்கத்தில் இருந்த சிலர் அரசியலில் நுழைந்து, ஆம் ஆத்மியை உருவாக்கினர். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற அவரின் கூற்றை, நான் நம்பவே இல்லை. இன்று ஆம் ஆத்மி கட்சியில் என்ன நடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். கட்சி துவக்கிய பின், என் வீட்டுக்கு வந்த கெஜ்ரிவால், ஆம் ஆத்மியில் சேர அழைத்தார். ஆனால் நான் ஒப்புக் கொள்ளவில்லை.எதிர்க்கட்சிகளை அழிக்க ஆளும்கட்சி அமலாக்க துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவாக குற்றம்சாட்டுகின்றன. இதை நான் நம்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இதையே தான் செய்யும். இதுபோன்று பல உதாரணங்கள் நம் நாட்டு அரசியலில் நடந்துள்ளன.தேர்தலில் ஜாதியை பார்த்து யாரும் ஓட்டு போட வேண்டாம். வேட்பாளரின் திறமை, தகுதியை பார்த்து ஓட்டு போடுங்கள். இல்லையெனில் 'நோட்டா'வை பயன்படுத்தி, அரசியல் கட்சியினருக்கு பாடம் புகட்டுங்கள்.இவ்வாறு அவர்கூறினார்.