உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்.,குக்கு ஆதரவளிப்பதாக கூறுவதா? மைசூரு ஒக்கலிகர் சங்கத்தில் அதிருப்தி!

காங்.,குக்கு ஆதரவளிப்பதாக கூறுவதா? மைசூரு ஒக்கலிகர் சங்கத்தில் அதிருப்தி!

மைசூரு, : மைசூரு லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போடுவதாக ஒக்கலிகர் சங்கத்தின் சிலர், தன்னிச்சையாக கூறியதால் சங்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.மைசூரு லோக்சபா தொகுதி, கர்நாடகாவின் அரசியல் பரபரப்பு மிகுந்த தொகுதிகளில் முக்கியமானதாகும். இங்கு, இன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு பா.ஜ., சீட் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், அரச குடும்பத்தின் யதுவீரை, பா.ஜ., மேலிடம் வேட்பாளராக்கியது. அவரும் உற்சாகத்துடன் பிரசாரம் செய்கிறார். பா.ஜ., முக்கிய தலைவர்களும் யதுவீருக்காக பிரசாரம் செய்கின்றனர். பா.ஜ., --- எம்.எல்.சி., விஸ்வநாத், 'மைசூரில் அரச குடும்பத்தின் வாரிசு களமிறங்கி உள்ளதால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிட கூடாது. காங்கிரசும் கூட போட்டியில் இருந்து விலகி, யதுவீரை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும்' என, கருத்து கூறினார்.மைசூரில் ஒக்கலிக சமுதாயத்தினர், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெற, பா.ஜ., காங்கிரஸ் முயற்சிக்கின்றன. இந்நிலையில், மைசூரு ஒக்கலிகர் சங்கத்தின் சிலர், காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணுக்கு, ஆதரவளிப்போம் என கூறினர். இது ஒக்கலிகர் சங்கத்தில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது:சங்கத்தை சேர்ந்த யாருடனும் ஆலோசிக்காமல், நிர்வாக இயக்குனரிடம் கூறாமல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க, ஒக்கலிகர் சங்கம் முடிவு செய்ததாக கூறியது சரியல்ல. ஒக்கலிகர் சங்கம் அரசியல் சார்ந்தது அல்ல. சமுதாயத்தினர் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம்.ஓட்டு போடுவது ஒவ்வொருவரின் கடமை. எங்கள் ஒட்டுகளை விருப்பமானவருக்கு போடுவோம். காங்கிரசுக்கு ஓட்டு போட, சங்கம் முடிவு செய்திருப்பதாக சில தலைவர்கள் கூறுவதை ஏற்க முடியாது.லோக்சபா தேர்தல், தேசிய அளவிலான விஷயங்கள் சம்பந்தப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, நேர்மையான அரசு, வலுவான தலைமை, ஊழலற்ற ஆட்சி என, பல விஷயங்களின் அடிப்படையில் நடக்கும். ஒக்கலிகர் சமுதாயத்தினர் காங்கிரசுக்கு ஓட்டு போடுவர் என கூற, அந்த நபர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார். எங்களுக்கு பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., என அனைத்து கட்சிகளும் ஒன்று தான். பல கட்சிகளுடன், சங்கத்தினர் அடையாளம் காணப்படுகின்றனர். தங்களின் சுயநலத்துக்காக, சங்கத்தை தவறான பாதையில் இழுப்பது சரியல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ