ஹிந்துத்வா குறித்து பேசக்கூடாதா? மடக்கினார் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
சித்ரதுர்கா: ''துணை முதல்வர் சிவகுமார், ஹிந்துத்வா குறித்து பேசக்கூடாதா? ஆன்மிக விஷயத்தில் என்னிடம் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை,'' என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கேள்வி எழுப்பினார்.சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:பூஜை செய்வதும், கும்பமேளாவுக்கு செல்வதும், அவரவர் விருப்பம். இது குறித்து எதற்காக கேள்வி எழுப்ப வேண்டும். துணை முதல்வர் சிவகுமார், ஹிந்துத்வா குறித்து பேசக்கூடாதா? அது அவரது பக்தி; தனி நபரின் சுதந்திரம். ஹிந்துத்வா குறித்து பேசுவதில் தவறு என்ன? பக்தி, பூஜை
ஹிந்துத்வா குறித்து பேசுவது, சிவகுமாரின் தனிப்பட்ட விஷயமாகும். இது குறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பக்தி, பூஜை, என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பது மனிதரின் தனிப்பட்ட சுதந்திரம். அவரது ஆன்மிக நம்பிக்கைகளை விமர்சிப்பது சரியல்ல. அவரது செயல் குறித்து, என்னிடம் கேட்டால், நான் என்ன சொல்ல முடியும்?நானும் கும்பமேளாவுக்கு, சிவராத்திரி கண் விழிக்க நான் சென்றிருந்தேன். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். ஆன்மிக விஷயத்தில் என்னிடம் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.எங்கள் அரசு வலுவாக உள்ளது. ஐந்து ஆண்டு ஆட்சி நடத்தும். மஹாராஷ்டிராவை போன்று, கர்நாடகாவில் எதுவும் நடக்காது. விஜயேந்திரா கூறுவது போன்று, மாநிலத்தில் எந்த அரசியல் புரட்சியும் ஏற்படாது. நகைப்பு
பா.ஜ.,விலேயே உட்கட்சி பூசல் உள்ளது. அவர்கள் கட்சியில் புரட்சி நடந்தாலும் நடக்கலாம். ஏக்நாத் ஷிண்டே போன்று, காங்கிரஸ் தலைவர் ஒருவர், எம்.எல்.ஏ.,க்கள் படையுடன், பா.ஜ.,வில் இணைவார் என, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு கூறுவது நகைப்புக்குரியது.துணை முதல்வர் சிவகுமார், ஈஷா பவுண்டேஷன் விழாவில், மத்திய அமைச்சர் அமித்ஷவுடன் ஒரே மேடையில் தோன்றியதால், அரசு கவிழும் என, கூற முடியாது.வாக்குறுதி திட்டங்கள் குறித்து, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் செய்தனர். மாநில பொருளாதார சீர் குலையை நினைத்து துக்கமாக இருப்பதாக கூறுகின்றனர்.டில்லி, மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வினரும் வாக்குறுதித் திட்டங்களை அறிவித்துள்ளனர். எப்படி செயல்படுத்துகின்றனர் என்பதை பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.