போதையில் தாயை கொன்ற மகன் கைது
தொட்டபல்லாபூர் : குடிபோதையில் தாயை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் அருகே முத்தநாயக்கனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ரத்னம்மா, 65. இவரது கணவர் இறந்து விட்டார். திருமணம் ஆகாத மகன் கங்கராஜ், 33, என்பவருடன் வசித்தார். கூலி வேலை செய்த கங்கராஜ், சில தினங்களாக வேலைக்கு செல்லவில்லை. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, தாயிடம் தகராறு செய்தார். அக்கம்பக்கத்தினர் புத்திமதி கூறியும் கேட்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், தாயிடம் தகராறு செய்தார். பின், திடீரென கத்தியை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடினார். வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த ரத்னம்மா இறந்தார்.நேற்று காலை அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, இறந்து கிடந்தார். தப்பி ஓடிய கங்கராஜை, தொட்டபல்லாபூர் போலீசார் கைது செய்தனர்.