| ADDED : ஜூலை 23, 2024 01:43 AM
புதுடில்லி, :உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது சொகுசு காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் கைதான, முன்னாள் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் 2021ல் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்க, அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, அப்போது மத்திய இணையமைச்சராக இருந்த அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோர் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில்m மத்திய அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர்.அப்போது அந்த கூட்டத்துக்குள், அமைச்சரின் மகன் ஓட்டிவந்த சொகுசு கார் புகுந்ததில் நான்கு விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர்.அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும், பா.ஜ., ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மொத்தமாக, இந்த சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்தனர்.அமைச்சரின் மகன் இருந்ததாக கூறப்படும் சொகுசு கார், விவசாயிகள் மீது மோதும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவினர், ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் வழக்கில் கைதான விவசாயிகள் சிலர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கில் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து பார்த்ததில், ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் விவசாயிகளுக்கு ஜாமின் அளிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தெரியவந்துள்ளது.'எனினும் ஆஷிஷ் மிஸ்ரா, டில்லி அல்லது லக்னோ நகரின் எல்லைகளை கடந்து செல்லக்கூடாது. இந்த வழக்கில் மொத்தம் 117 சாட்சியங்கள் உள்ள நிலையில், இதுவரை ஏழு பேரிடம் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.'எனவே, இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் துரிதமாக விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.