புதுடில்லி,இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான டிரைவிங் லைசென்ஸ் குழப்பம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இதன்படி, எல்.எம்.வி., எனப்படும் இலகு ரக மோட்டார் வாகன லைசென்ஸ் வழங்கப்படுகிறது. இது, கார் போன்ற தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு பொருந்தும். அதுபோல, 7,500 கிலோ எடைக்கு மிகாத பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களுக்கும் எல்.எம்.வி., லைசென்ஸ் வழங்கப்படுகிறது.மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரும் ஒரு வழக்கில், 2017ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில், 7,500 கிலோ வரை எடையுள்ள பயணியர் வாகனங்கள், இலகுரக மோட்டார் வாகனம் என்பதற்கான வரையறையில் இருந்து நீக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, விபத்துகளில் காப்பீடு வழங்குவது உள்ளிட்டவற்றில் குழப்பம் உள்ளதாக, காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் சார்பில், 76 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, கடந்தாண்டில் இருந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.முந்தைய விசாரணையின்போது, 'இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான லைசென்ஸ் பெற்றவர்கள், குறிப்பிட்ட எடையுள்ள இலகு ரக மோட்டார் வாகனப் பிரிவில் உள்ள வர்த்தகப் பயன்பாட்டு வாகனத்தை ஓட்டலாமா என்பது ஒரு கொள்கை முடிவாகவே இருக்க முடியும். மக்களின் பாதுகாப்பு, காப்பீட்டு விவகாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமர்வு கூறியிருந்தது.'மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய உள்ளதாக, அப்போது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பார்லிமென்டில் தாக்கல் செய்து சட்டத் திருத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இதை ஏற்காத அமர்வு தன் விசாரணையை தொடர்ந்து நடத்தியது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சட்டத் திருத்தங்கள் தயாராக உள்ளதாகவும், வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அமர்வு தன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.