புதுடில்லி: மத்திய பிரதேசத்தில், இரண்டு பெண் நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்த உச்ச நீதிமன்றம், அவர்களை, 15 நாட்களுக்குள் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என, அம்மாநில உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தில், பெண் சிவில் நீதிபதிகளின் பணிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்த மாநில உயர் நீதிமன்றம், அதிதிகுமார் சர்மா மற்றும் சரிதா சவுத்ரி ஆகியோரை பணியிலிருந்து நீக்கியது.'அந்த பெண் சட்ட அதிகாரிகளில் ஒருவர், பணியின்போது திருமணம் செய்து கொண்டார். கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது. அவர்களின் பணி சரியில்லை' என, பணி நீக்கத்துக்கு காரணம் கூறப்பட்டது.இந்த விவகாரத்தை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: இரண்டு பெண் நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பாக ம.பி., உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஒருதலைப்பட்சமானது, சட்ட விரோதமானது, தண்டனைக்குரியது. ம.பி., உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திருப்திகரமாக இல்லை. எனவே, 15 நாட்களுக்குள் அவர்கள் இருவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என உத்தரவிடுகிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக, அந்த இரு நீதிபதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, ''குழந்தை பிறப்பின் போது மனநிறைவு ஏற்படும். ''ஆனால், கருச்சிதைவின் போது அந்த பெண்ணின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்; தீவிர மன பாதிப்பு ஏற்படும்; தற்கொலை எண்ணம் கூட ஏற்படும். சமூகத்திலிருந்து அத்தகைய பெண்கள், ஒதுக்கி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.''பெண் நீதிபதிகளுக்கு பணியிடத்தில் சுகமான வசதிகளை செய்துள்ளோம் என, கூறுவதை ஏற்க முடியாது. ''நாள் முழுக்க உட்கார்ந்து, வழக்குகளை விசாரிக்கும் போது ஏற்படும் தலைவலியை போக்க, வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக்கொண்டு, பல பெண் நீதிபதிகள் நீதி பரிபாலனம் செய்கின்றனர்,'' என்றார்.