தெலுங்கானா ஆணவக்கொலை; குற்றவாளிக்கு துாக்கு தண்டனை
ஹைதராபாத் : தெலுங்கானாவில், தலித் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு, துாக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தெலுங்கானாவின் நல்கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பிரனய் குமார், 23, என்ற தலித் இளைஞர், 2018 செப்டம்பரில், வேறு ஜாதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் மருத்துவமனை வாசலில், அம்ருதா கண் எதிரே பிரனய் குமார் படுகொலை செய்யப்பட்டார். தன் தந்தை மாருதி ராவ், மாமா உள்ளிட்டோர் துாண்டுதலின் அடிப்படையில், கூலிப்படையினரால் கணவர் கொலை செய்யப்பட்டதாக போலீசில் அம்ருதா புகார் அளித்தார்.இதன்படி, 2018 செப்., 18ல் மாருதி ராவ் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் கொலை வழக்கிலிருந்து இருந்து விடுவிக்கப்பட்ட இருவரும் அடங்குவர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, 2020ல், மாருதி ராவ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆணவக் கொலை வழக்கு விசாரணை, கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்கோண்டா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, வழக்கில் இரண்டாவதாக குற்றஞ்சாட்டப்பட்ட, கூலிப்படையைச் சேர்ந்த சுபாஷ் குமார் சர்மா என்பவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.