கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவேடு அமைத்தது மத்திய அரசு
புதுடில்லி : கைகள் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, மத்திய அரசு முதல்முறையாக பதிவேட்டை அமைத்துள்ளது.இதயம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை போல, கைகளை இழந்தவர்கள், உயிரிழந்தவர்களின் கைகளை தானமாக பெற்று, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறை, முதல்முறையாக 2015ல் செய்யப்பட்டது. இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெளிப்படைத் தன்மையுடனும், முன்னுரிமை அடிப்படையிலும் செய்யும் நோக்கத்தில், இதற்கான பிரத்யேக பதிவேட்டை மத்திய அரசு அமைத்துள்ளது.மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, இந்த பதிவு நடைமுறைகளை நிர்வகிக்கிறது.நாட்டின் முதல் கை மாற்று அறுவை சிகிச்சையை செய்தவரும், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவருமான டாக்டர் சுப்ரமணியன் கூறியதாவது:பொதுவாக மூளைச்சாவு அடைந்த நோயாளியிடம் இருந்து தான் உறுப்பு தானம் பெறப்படும். கைகளை பொறுத்தவரை மூளைச்சாவு மற்றும் மாரடைப்பால் உயிரிழந்தவர்களிடம் இருந்து கைகளை பெற முடியும். மாரடைப்பால் உயிரிழந்தவரின் உடலில் இருந்து அரை மணி நேரத்திற்குள் கைகளை எடுக்க வேண்டும். இதற்கென தனியாக பதிவேட்டை அமைத்திருப்பது, கை மாற்று அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும். தானம் தருபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதுடன், காத்திருப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் கைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.நாட்டில், கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒன்பது மருத்துவமனைகள் பதிவு பெற்றுள்ளன. 36 பேருக்கு கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.