| ADDED : ஆக 10, 2024 06:21 AM
பெங்களூரு: முதல்வரின் தனிச்செயலர் என்று நாடகமாடி, விதான் சவுதாவுக்குள் நுழைய முயன்ற ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு சிவாஜிநகர் அம்பேத்கர் வீதியில், கர்நாடக அரசின் அதிகார மையமான விதான் சவுதா உள்ளது. இங்கு முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், மேல் சபை தலைவர், அரசு அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன.இதனால் விதான் சவுதா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும். அமைச்சர்களை சந்தித்து மனு கொடுக்க வருபவர்கள், பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.நேற்று முன்தினம் விதான் சவுதா நுழைவு வாயிலில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர், அடையாள அட்டையை காட்டிவிட்டு உள்ளே நுழைய முயன்றார்.சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். முதல்வரின் தனிச் செயலர் என்றார். அவர் வைத்திருந்த அடையாள அட்டையிலும் தனிச் செயலர் என்று அச்சிடப்பட்டு இருந்தது.அந்த அடையாள அட்டை, போலி என்பதை, போலீசார் கண்டறிந்தனர். அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பெலகாவி கோகாக் ஜெயநகரின் ஸ்ரீசைலா ஜக்கண்ணவர், 46, என்பதும், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்யும், ஒப்பந்ததாரர் என்றும் தெரிந்தது.அமைச்சர்களை சந்திக்க அடிக்கடி விதான் சவுதா வந்துள்ளார். பாஸ்இல்லாததால் பல முறை திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார்.இதனால் முதல்வரின் தனிச் செயலர் என, போலியாக அடையாள அட்டை தயாரித்து, அதை பயன் படுத்தி விதான் சவுதாவுக்குள் நுழைய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.