உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணை அதிகாரி போல் கவர்னர் செயல்பட்டுள்ளார்! அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி குற்றச்சாட்டு

விசாரணை அதிகாரி போல் கவர்னர் செயல்பட்டுள்ளார்! அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி குற்றச்சாட்டு

பெங்களூரு: 'மூடா' முறைகேடு விவகாரத்தில், விசாரணை அதிகாரி போல் கவர்னர் செயல்பட்டுள்ளதாக, மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதாடினார். இந்த வழக்கில் வரும் 12ல் இறுதி விசாரணை நடக்கிறது.'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணைய முறைகேடு விஷயத்தில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஜூலை 17ம் அனுமதி அளித்தார். இதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் முதல்வர், ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.முதல்வர், கவர்னர், கேவியட் மனுதாரர்கள் ஆபிரகாம், பிரதீப் குமார், ஸ்நேகமயி கிருஷ்ணா ஆகியோர் தரப்பிலான வக்கீல்களின் வாதங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன.

தனி நபர்கள்

இம்மனு மீதான விசாரணை, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதாடியதாவது:ஊழல் ஒழிப்பு சட்ட பிரிவு 17 'ஏ'வின் கீழ் விசாரணை நடத்த அனுமதி அளிப்பதற்கு முன்பு, விசாரணை அதிகாரி, முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும்.தனி நபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கவர்னர், விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளார். தனி நபர்களை, போலீஸ் அதிகாரிகளை விட உயர்ந்த இடத்தில் வைக்க முடியாது.

அவகாசம்

எனவே முதல்கட்ட விசாரணை தேவை. இந்த வழக்கில் முதல் கட்ட விசாரணை நடக்கவில்லை. லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தாலும் விசாரணை நடத்த அவர்களுக்கு அவகாசம் அளிக்கவில்லை.இந்த வழக்கில், கவர்னர் முதல்கட்ட விசாரணை நடத்தி உள்ளார். போலீஸ் அதிகாரி மட்டுமே விசாரணை நடத்த முடியும். தேவை எனில், விசாரணை அதிகாரியிடம் கவர்னர் தகவல் பெறலாம்.ஆனால், கவர்னரே விசாரணை அதிகாரி போல் செயல்பட்டுள்ளார். சட்டப்பிரிவு 17 'ஏ' குறித்து, மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துள்ளது. இந்த தகவல் கவர்னருக்கு தெரிந்திருந்தால், புகார்களை நிராகரித்திருப்பார்.

லோக் ஆயுக்தா

தனி நபர்களின் புகார்களை அவர் பரிசீலித்திருக்க கூடாது. விசாரணை அதிகாரி அளிக்கும் முதல் கட்ட அறிக்கையை பரிசீலித்து, அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பதை அவர் முடிவு செய்திருக்கலாம்.ஜூலை 18 மற்றும் 25 ஆகிய நாட்களில், முதல்வருக்கு எதிராக லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.அதாவது விசாரணை நடத்த போலீசாருக்கு அவகாசமே வழங்கப்படவில்லை. கவர்னர் உத்தரவில் காரணங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் கவர்னரின் கோப்பில் இல்லை.இவ்வாறு அவர் வாதாடினார்.

சித்தராமையா

தொடர்ந்து, கேவியட் மனுதாரர் ஸ்நேகமயி கிருஷ்ணா தரப்பு வக்கீல் லட்சுமி அய்யங்கார் வாதாடியதாவது:சித்தராமையா, 1996 - 99 கால கட்டத்தில், துணை முதல்வராக இருந்தார். அப்போது தான், 3.16 ஏக்கர் நிலம், மறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 2008 - 13 இடைப்பட்ட காலத்தில், நிலம் மாற்றப்பட்டுஉள்ளது.பின், சித்தராமையா முதல்வராக இருந்த 2013 - 18 கால கட்டத்தில், அவரது மனைவி, நிவாரணம் கேட்டு, மூடாவில் விண்ணப்பித்துள்ளார். சித்தராமையா எம்.எல்.ஏ., பதவியில் இருந்த 2018 - 22 காலத்தில், 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவர் அதிகாரத்தில் இருந்த காலத்தில் தான் அனைத்தும் அவருக்கு சாதகமாக நடந்துள்ளது. இவ்வளவு நடந்த பின், 14 மனைகளை திரும்பப் பெற்று, 64 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, சித்தராமையா 2023ல் கேட்டுள்ளார்.இவ்வாறு அவர் வாதாடினார்.இதையடுத்து, வரும் 12ம் தேதி, நண்பகல் 12:00 மணிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், முதல்வர் தரப்பில், உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி இறுதி கட்டமாக வாதாட உள்ளார். அன்றே அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என, நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை